ஜாதி, மதம் பெயரில் மக்களை துாண்டிவிடுகின்றனர் பா.ஜ., தலைவர்கள் மீது சித்தராமையா குற்றச்சாட்டு
மைசூரு: ''ஜாதி, மதத்தின் பெயரில் மக்களை பா.ஜ., தலைவர்கள் துாண்டி விடுகின்றனர்,'' என்று, முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மைசூரு தசராவை துவக்கி வைப்பவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை, தசரா உயர்மட்ட கமிட்டி எனக்கு வழங்கியது. சர்வதேச அளவில் புக்கர் பரிசு வென்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்கை தேர்வு செய்தேன். இதற்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தசரா மதசார்ப்பற்ற விழா. துவக்க விழாவிற்கு மதரீதியான விமர்சனத்தை, பா.ஜ., தலைவர்கள் முன்வைப்பது சரியல்ல. கன்னட தாய் புவனேஸ்வரி பற்றி, பானு முஷ்டாக் முன்பு பேசியதற்கும், தசராவை துவக்கி வைப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. புஷ்கர் விருதின் மகத்துவம் தெரியாத பா.ஜ., தலைவர்கள், பானு முஷ்டாக்கை எதிர்க்கின்றனர். கன்னட மொழி மீது மரியாதை, அன்பு இருந்ததால் கன்னட மொழியில் இலக்கியம் எழுதி உள்ளார். பானு முஷ்டாக் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று கூறும் பா.ஜ., தலைவர்கள், அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதை நேரில் பார்த்தனரா. இதற்கு முன்பும் முஸ்லிம் சமூகத்தின் நிசார் அகமது, தசராவை துவக்கி வைத்து உள்ளார். மன்னர்கள் காலத்தில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் தசராவை கொண்டாடினர். மைசூரு திவானாக இருந்த, மிர்சா இஸ்மாயில் வெகுவிமரிசையாக தசராவை கொண்டாடினார். ஆனால் இப்போது ஜாதி, மதத்தின் பெயரில் பா.ஜ., தலைவர்கள், மக்களை துாண்டி விடுகின்றனர். தர்மஸ்தலா வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பா.ஜ., தலைவர்கள், 'தர்மஸ்தலா சலோ' நடத்துகின்றனர். தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணையை கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே வரவேற்று உள்ளார். பா.ஜ.,வினர் என்ன நினைக்கின்றனரோ அதை செய்யட்டும்; எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. வரி குறைவு வழக்கு விசாரணையை எஸ்.ஐ.டி., சிறப்பாக நடத்துகிறது. இதனால் வேறு எந்த விசாரணையும் நடத்த தேவை இல்லை. விசாரணையில் அரசு தலையிடாது; குறிப்பிட்ட நேரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று, நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம். ஜி.எஸ்.டி., வரியால் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவுக்கு 15,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது. மாநிலத்தின் வருமானத்தை பாதுகாப்பது எங்கள் நோக்கம். ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்ட பின், ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே மத்திய அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் வரும் 3, 4ம் தேதிகளில் புதுடில்லியில் நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அரசு சார்பில் வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கலந்து கொள்வார். சொத்து வரி, பத்திரப்பதிவு வரியை 1 சதவீதம் தான் உயர்த்தி உள்ளோம். மற்ற மாநிலங்களை விட இங்கு வரி குறைவு. கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்கள், நமது மாநில மத்திய அமைச்சர்கள், மாநிலத்திற்கு நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் ஒருபோதும் பேசியது இல்லை. இவ்வாறு அவர் கூறிார். இதையடுத்து எம்.எல்.சி., சந்தேஷ் நாகராஜின், 80வது பிறந்தநாளை ஒட்டி, மைசூரில் நடந்த மாநாட்டில் சித்தராமையா கலந்து கொண்டார். இம்மாநாட்டில் பங்கேற்ற நடிகர் சுதீப்பிடம், சித்தராமையா நெருக்கம் காட்டியது அனைவரையும் கவர்ந்தது. கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுதீப் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ராம்சரண் சந்திப்பு
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ராம்சரண் நடிக்கும் பெட்டி என்ற, தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடக்கிறது. நேற்று படப்பிடிப்பு இடைவெளியில், மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள இல்லத்தில் சித்தராமையாவை, ராம்சரண் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் லாட், முதல்வரின் மகன் யதீந்திரா உடன் இருந்தனர்.