உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் ஓட்டு திருட்டு ராகுலுக்கு சித்தராமையா ஆதரவு

கர்நாடகாவில் ஓட்டு திருட்டு ராகுலுக்கு சித்தராமையா ஆதரவு

பெங்களூரு: 'லோக்சபா தேர்தலின்போது, கர்நாடகாவில் ஓட்டு திருட்டு நடந்துள்ளது என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதை, நான் ஆமோதிக்கிறேன்' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு: கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல் முடிவு எங்களுக்கு ஆச்சரியமளித்தது. அது மட்டுமின்றி, பல விதமான சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. இத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தை, பா.ஜ., தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்ததே, காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்பது, இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. கர்நாடகாவில் ஓட்டு திருட்டு நடந்துள்ளது என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதை, நான் ஆமோதிக்கிறேன். தேர்தல் முறைகேடுகளை, ஒவ்வொன்றாக அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். மாநிலத்தின் பல தொகுதிகளில், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், பழைய வாக்காளர்களின் பெயர்களை ரத்து செய்ததாகவும் எங்கள் தொண்டர்கள் புகார் அளித்தனர். தேர்தல் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கோ, பா.ஜ.,வின் சாதனைகளோ காரணம் இல்லை. கர்நாடகாவில் நடந்துள்ள தேர்தல் முறைகேடுகள் குறித்து, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ராகுல், மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி