உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லஞ்சம் வாங்காமல் வேலை வி.ஏ.ஓ.,க்களுக்கு சித்து அறிவுரை

லஞ்சம் வாங்காமல் வேலை வி.ஏ.ஓ.,க்களுக்கு சித்து அறிவுரை

பெங்களூரு: ''ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் வேலை செய்யுங்கள்,'' என, புதிய வி.ஏ.ஓ.,க்களுக்கு, முதல்வர் சித்தராமையா அறிவுரை கூறினார்.கர்நாடக அரசின் வருவாய் துறைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.ஏ.ஓ., எனும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது.முதல்வர் சித்தராமையா பேசியதாவது:வருவாய்த் துறைக்கு புதிதாக வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்ய கர்நாடக தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றுள்ளீர்கள். மாநிலத்தில் மொத்தம் 9,834 வி.ஏ.ஓ.,க்கள் பதவிகள் உள்ளன. புதிதாக தேர்வாகி உள்ள உங்களுடன் சேர்த்து தற்போது 9,003 பேர் பணியில் உள்ளனர். மேலும் 500 பணியிடங்களை விரைவில் நிரப்புவோம்.ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமலும், இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமலும் உங்களை நியமித்துள்ளோம்.நீங்களும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வேலை செய்யுங்கள்.கோவிந்தகவுடா கல்வி அமைச்சராக இருந்தபோது ஒரு லட்சம் ஆசிரியர்கள் லஞ்சம் அல்லது இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நியமிக்கப்பட்டனர்.கிராம நிர்வாக அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால், விவசாயிகள் உங்கள் பேச்சை கேட்பர். மக்கள் வேலை கடவுள் வேலை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா பேசியதாவது:மாநில வரலாற்றில் ஒரே நேரத்தில் 1,000 வி.ஏ.ஓ.,க்கள், பணிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை. வெளிப்படையான முறையில் ஆள்சேர்ப்பு நடத்தி உள்ளோம். அனைத்து மாவட்டங்களுக்கும், சமமான வாய்ப்பு கொடுத்து இருக்கிறோம்.வி.ஏ.ஓ.,க்கள் பணி சுமை, பயண நேரத்தை குறைக்கும் வகையில் 4,000 லேப்டாப்கள் வழங்கப்படும்.இந்த வேலைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று, என்னிடம் சிலர் கேட்டனர். ஆனால் வெளிப்படையான முறையில் ஆள்சேர்ப்பு நடக்கிறது. என்னால் முடியாது என்று கூறிவிட்டேன். ஒருவேளை நானே நினைத்தால் கூட, பரிந்துரை பெயரில் யாரையும் வேலைக்கு சேர்க்க முடியாது. அந்த அளவுக்கு அரசு நேர்மையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V Venkatachalam
ஏப் 30, 2025 16:37

சித்து லஞ்சத்தை பத்தி பேசுறது பூனை பாலை வேண்டாம் என்று சொல்வதற்கு சமம். பணமா வாங்காமல் நிலமாகவோ வீடாகவோ வாங்கி கொள்ளலாம் என்று அர்த்தம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை