சித்துவுக்கு மேலிடம் ஆதரவு: மகன் யதீந்திரா திட்டவட்டம்
மைசூரு: ''முதல்வர் சித்தராமையாவின் நாற்காலிக்கு, எந்த ஆபத்தும் இல்லை. அவருக்கு காங்கிரஸ் மேலிடம், பக்க பலமாக உள்ளது,'' என, முதல்வர் மகனும், காங்., - எம்.எல்.சி.,யுமான யதீந்திரா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் நாற்காலியை தக்கவைத்துக்கொள்ள, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை கிளப்பியதாக, பா.ஜ.,வினர் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.முதல்வரின் நாற்காலிக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை. அபாயமே இல்லை என்ற பின், அதுபற்றி பேசுவது அர்த்தமற்றது.முதல்ருக்கு பக்கபலமாக, கட்சி மேலிடம் உள்ளது. மாநிலத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதாக உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அவர் அறிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, எங்களின் கடமை. இதை வெளியிட்டால் அனைவருக்கும் நியாயம் கிடைக்கும். மக்கள்தொகை அடிப்படையில், இட ஒதுக்கீடு அதிகம் கிடைக்கும்.தற்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பு சரியானது. உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மறு கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.