கர்நாடகாவில் அம்பாள் கோவில்கள் ஏராளம் உள்ளன. குறிப்பாக புராதன பிரசித்தி பெற்ற கோவில்கள், பக்தர்களை சுண்டி இழுக்கின்றன. இவற்றில் சிர்சி மாரிகாம்பா கோவிலும் ஒன்றாகும். இது பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இன்றைய ஹனகல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், விராட நகராக இருந்தது. இதை ஆட்சி செய்த மன்னர் தர்மராஜர், பார்வதி தேவியின் பக்தர் என, மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. சாளுக்கியர் காலத்திய சாசனங்களிலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஆட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் குடிகொண்ட மாரிகாம்பாவுக்கு, ஆண்டு தோறும் திருவிழா நடத்துவர். தேவிகெரே ஏரி ஒரு முறை திருவிழா முடிந்த பின், தங்க நகைகளுடன் அம்பாள் சிலையை பிரித்து ஒரு பெட்டியில் வைத்திருந்தார். சில திருடர்கள், நகைக்கு ஆசைப்பட்டு பெட்டியை திருடி சென்றனர். உத்தரகன்னடா சிர்சிக்கு கொண்டு வந்தனர். நகைகளை பங்கிட்டு கொண்ட பின், அம்பாள் விக்ரகத்தை அதே பெட்டியில் வைத்து, அங்கிருந்த ஏரியில் வீசிவிட்டு சென்றனர். அந்த ஏரி இப்போது தேவிகெரே என, அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் சிர்சி குக்கிராமமாக இருந்தது. இங்கு வசித்த ஒரு அம்பாள் பக்தர், ஆண்டு தோறும் தவறாமல், தர்மராஜர் நடத்தும் திருவிழாவில் பங்கேற்பார். ஒரு முறை திருவிழாவுக்கு வரும் போது, வழியில் ஊர் மக்கள் அவரை சேர்க்காமல் திட்டி விரட்டினர். இதனால் மனம் வருந்திய அவர், திருவிழாவுக்கு செல்வதை நிறுத்தினார். தன் வீட்டிலேயே அம்பாளை பூஜித்து வந்தார். ஒரு நாள் இரவு அவர் உறங்கிய போது, கனவில் தோன்றிய மாரிகாம்பா, 'நான் மாரிகாம்பா. உங்கள் ஊரின் ஏரியில்தான் இருக்கிறேன். என்னை மேலே எடுங்கள்' என உத்தரவிட்டார். தனக்கு வந்த கனவை, அவர் ஊராரிடம் தெரிவித்தார். மக்கள் அனைவரும் ஏரியை சுற்றி நின்று, அம்பாளை பிரார்த்தனை செய்தனர். அப்போது நீருக்கு அடியில் இருந்த பெட்டி மிதந்து மேலே வந்தது. அதை திறந்து பார்த்த போது, அம்பாள் சிலை இருப்பது தெரிந்தது. அதில் இருந்த விக்ரகத்தின் உதிரி பாகங்களை ஒன்று சேர்த்து முழுமையாக்கினர். 1689 ல் பிரதிஷ்டை இதை பிரதிஷ்டை செய்ய, சோந்தா சமஸ்தானத்தின் மன்னரிடம் அனுமதி கோரினர். அவர் அனுமதி அளித்ததால், 1689ல் கோவிலில், மாரிகாம்பா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கோவிலில் திருவிழா நடத்தினர். அந்த சம்பிரதாயம், இப்போதும் தொடர்கிறது. இந்தியாவில் நடத்தப்படும், மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். 1933ல் காந்தி, சிர்சி மாரிகாம்பாவை தரிசனம் செய்திருந்தார். நவம்பர், டிசம்பரில் மாரிகாம்பா திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இன்று திருவிழா துவங்குகிறது. வரும் 5ம் தேதி வரை நடக்கும். சிர்சி விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்றிரவு 10:00 மணிக்கு அம்பாளின் பல்லக்கு ஊர்வலம் நடக்கும். ஐந்து நாட்களும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம், ஹோமங்கள் நடக்கின்றன. அம்பாள் பற்றிய உபன்யாசம், பஜனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவிலின் சுற்றுப்பகுதி சாலைகளில், தற்காலிக கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வீதிகளில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திருவிழா களைகட்டியுள்ளது. அம்பாளை தரிசித்தால் கேட்டது கிடைக்கும். திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் நீங்கி, வாழ்க்கை வளமாகும் என்பது ஐதீகம். இந்த காரணத்தால், கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எப்படி செல்வது பெங்களூரில் இருந்து 407 கி.மீ., மங்களூரில் இருந்து 260 கி.மீ., உத்தரகன்னடாவில் இருந்து 31 கி.மீ., தொலைவில் சிர்சி உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாடகை வாகனங்கள், தனியார் பஸ் வசதியும் உள்ளன. சிர்சியில் இருந்து இரண்டரை கி.மீ., தொலைவில் மாரிகாம்பா கோவில் அமைந்துள்ளது. சிர்சியில் இருந்து வாடகை வாகனங்களில் கோவிலுக்கு செல்லலாம். தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. அருகில் உள்ள தலங்கள்: முருடேஸ்வரா, மஹா கணபதி கோவில், சஹஸ்ரலிங்கம், நாகேஸ்வரர் கோவில், சித்தேஸ்வரா கோவில். தொடர்பு எண்: 083842 26360, 08384 - 226338 - நமது நிருபர் -