ஹெச்.ஐ.வி.,யால் பாதித்த தம்பியின் கழுத்தை நெரித்து கொன்ற அக்கா, மாமா
சித்ரதுர்கா: தம்பிக்கு ஹெச்.ஐ.வி., இருந்ததால், குடும்ப மரியாதைக்காக அவரை கொலை செய்த அக்கா, மாமா கைது செய்யப்பட்டனர். சித்ரதுர்கா மாவட்டம், ஹொலல்கெரே தாலுகாவின் தும்மி கிராமத்தில் வசிப்பவர் நாகராஜ், 56. இவரது மகன் மல்லிகார்ஜுன், 23. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இம்மாதம் 23ம் தேதி, ஹிரியூரின், ஐமங்கலா அருகில் கரிமாரி சாலையில், பைக்கில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த அவர், தாவணகெரேவின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிர்ச்சி அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், அவருக்கு ஹெச்.ஐ.வி., நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மல்லிகார்ஜுனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், ஜூலை 25ல் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினர். இதன்படி மல்லிகார்ஜுனாவின் அக்கா நிஷா, 25, அவரது கணவர் மஞ்சுநாத், 32, ஆகியோர் ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆனால், வழியில் அவர் இறந்துவிட்டார். மூச்சுத் திணறி இறந்ததாக நிஷாவும், அவரது கணவரும் கூறினர். அதன்பின் உடலை கிராமத்துக்கு கொண்டு சென்று, இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது மல்லிகார்ஜுனாவின் உடலில், கழுத்தில் காய அடையாளங்கள் இருந்தன. இதை பார்த்து சந்தேகமடைந்த அவரது தந்தை நாகராஜ், ஹொலல்கெரே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் கிராமத்துக்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை அறிக்கையில், மல்லிகார்ஜுன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன்பின் போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பவ நாளன்று ஆம்புலன்சில் இருந்த மல்லிகார்ஜுனின் அக்கா நிஷாவையும், மாமா மஞ்சுநாத்தையும் விசாரித்த போது, கொலை ரகசியம் அம்பலமானது. திருமணமாகாத தன் தம்பிக்கு ஹெச்.ஐ.வி., இருந்ததை, நிஷாவால் சகிக்க முடியவில்லை. இவ்விஷயம் வெளியே தெரிந்தால், குடும்ப மானம், மரியாதை பாழாகும் என, அஞ்சினார். ஏற்கனவே விபத்தில் பலத்த காயங்களுடன் அவதிப்பட்ட தம்பியிடம், 'நீ உயிரோடு இருந்தால், மானம் போகும். நீ இறப்பதே மேல்' என, திட்டி உள்ளார். ஆம்புலன்சில் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, அக்காவும், மாமாவும் சேர்ந்து மல்லிகார்ஜுன் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளனர். மூச்சுத்திணறி தம்பி இறந்ததாக நாடகமாடியதை, போலீசார் கண்டுபிடித்தனர். போலீஸ் பாணி முதலில் நிஷாவும், மஞ்சுநாத்தும் கொலை செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை. போலீசார் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில், தங்கள் பாணியில் விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, மல்லிகார்ஜுன் குடும்பத்தில் உள்ள அனைவரும், ரத்த பரிசோதனை செய்து கொள்ளும்படி, டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.