மேலும் செய்திகள்
படுக்கையானது ஓடுபாதை; விமான பயணியர் வெறுப்பு
04-Nov-2026
சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
26-Oct-2026
– நமது நிருபர் –: கர்நாடாகாவை சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் கொல்லரா, கோவாவில் நடந்த பிரபலமான, ‘ அயர்ன் மேன் 70.3’ போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் கொல்லரா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், தன் உழைப்பு மற்றும் விடா முயற்சியால், 2018ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். நாட்டின் மிகவும் கடினமாக ராணுவ பயிற்சிக்கும், செயல் திறனுக்கும் பெயர் பெற்ற, 'பாரா ஸ்பெஷல் போர்ஸ்'க்கு தேர்வு செய்யப்பட்டார். உத்தர கன்னடா மாவட்டத்தில் இருந்து, இந்த சிறப்பு படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ராணுவ வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், ஹிமாச்சல் பிரதேசம், பெங்களூரில் பணியாற்றிய இவர், தற்போது உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் பணியாற்றி வருகிறார். ராணுவ பணியில் மட்டுமின்றி, விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார். கோவாவில் நவம்பர் 1ல் நடந்த, 'அயர்ன் மேன் 70.3' போட்டியில், பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில், மூன்று விளையாட்டு பிரிவுகளில் பிரகாஷ் கொல்லரா பங்கேற்றார். கடலில் 1.9 கி.மீ., நீச்சல், 90 கி.மீ., சைக்கிளிங், 21.1 கி.மீ., ஓட்டம் என, மூன்று போட்டிகள் நடந்தன. தொடர்ச்சியாக நடந்ததால், ஒரு போட்டி முடிந்தவுடன், மற்றொன்றுக்கு தயாராக வேண்டி இருந்தது. இந்த போட்டிகளுக்கு, பொறுமை, கடினபயிற்சி, உடல் திறனுடன் மன திடமும் அவசியம். இதில் வெற்றி பெறுவது, சாதாரண விஷயம் அல்ல. கடினமான மூன்று போட்டிகளையும், பிரகாஷ் கொல்லரா வெறும் ஆறு மணி நேரங்களில் முடித்தார். ராணுவ சீருடை அணிந்து, நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள பிரகாஷ் கொல்லரா, விளையாட்டிலும் தன் திறமையை நிரூபித்துள்ளார். அவர் கூறியதாவது: அயர்ன் மேன் 70.3 போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சாதனையின் பின்னணியில் நிரந்தர பயிற்சி, தன்னம்பிக்கை உள்ளது. ராணுவத்தில் நான் பெற்ற பயிற்சிகள், என் உடல் வலிமையை, மன திடத்தை அதிகரிக்க காரணமாக இருந்தன. கார்வாரின் சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு, இந்த சாதனை திருப்தி அளிக்கிறது. என் சாதனையை கவனித்து, மாவட்ட இளம்தலைமுறையினர், விளையாட்டிலும், உடல் திறனை அதிகரிப்பதிலும் ஆர்வம் காட்டினால், அதை விட சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
04-Nov-2026
26-Oct-2026