உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண்கள், சிறார் பாதுகாப்புக்காக சிறப்பு காவல் குழுக்கள் அமைப்பு

 பெண்கள், சிறார் பாதுகாப்புக்காக சிறப்பு காவல் குழுக்கள் அமைப்பு

பெங்களூரு: நகர்ப்பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறார்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம், குழந்தை திருமணம் உட்பட அவர்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 'பெண்கள், சிறார்கள் காவல் குழுக்கள்' அமைக்கப்படுகின்றன. இது குறித்து மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்தில் பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, சிறார்கள் கடத்தல், குழந்தை திருமணம் போன்ற குற்றங்களை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்கள், சிறார்களின் நலனுக்காக, 'காவல் குழுக்கள்' அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் ஏற்கனவே சிறார் காவல் குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுக்கள் பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற அவலங்களை தடுக்கின்றன. இது போன்று நகர்ப்பகுதிகளில், பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 'பெண்கள், சிறார்கள் காவல் குழுக்கள்' அமைக்கப்படுகின்றன. இக்குழுக்களில் கல்வி, சுகாதாரம், போலீஸ் அதிகாரிகள் இருப்பர். நகர உள்ளாட்சிகளின் தலைவர், 'பெண்கள், சிறார்கள் காவல் குழு'வின் தலைவராக இருப்பார். மகளிர் கவுன்சிலர்கள் துணைத் தலைவர்களாக இருப்பர். கல்வித்துறை அதிகாரிகள், தாலுகா சுகாதார அதிகாரி, எஸ்.ஐ., தன்னார்வ அமைப்புகளின் மகளிர் உறுப்பினர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை, சிறுபான்மை நலத்துறையின், தலா ஒரு அதிகாரி, வார்டு அளவிலான அதிகாரி, நகராட்சி அதிகாரிகள் பெண்கள், சிறார்கள் காவல் குழுவின் உறுப்பினராக இருப்பர். குழுக்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மகளிர் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழுக்கள், குழந்தை திருமணங்களை தடுப்பர். ஒருவேளை திருமணங்கள் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வர். கோடைக்காலம் முடிந்து, பள்ளிகள் திறந்த பின், பள்ளிகளில் சேரும் சிறார்கள் குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக்கு வராத சிறார்களின் பெற்றோரை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறார்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி