உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜப்பான் மாதிரியை பின்பற்ற நடவடிக்கை: முதல்வர் சிவகுமார் தகவல்

ஜப்பான் மாதிரியை பின்பற்ற நடவடிக்கை: முதல்வர் சிவகுமார் தகவல்

பெங்களூரு: ‘‘ஜப்பானின் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்களான போக்குவரத்து, குப்பை அகற்றுதல், நகர்ப்புற மேம்பாடு, தொழில் துறை மேம்பாட்டு மாதிரிகளை கர்நாடகாவிலும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, முதல்வர் சிவகுமார் உறுதிபட கூறினார். ஜப்பானுக்கு மூன்று நாள் பயணமாக சென்று திரும்பிய பின், பெங்களூரில் முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி; ஜப்பானின் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்களான போக்குவரத்து, குப்பை அகற்றுதல், நகர்ப்புற மேம்பாடு, தொழில் துறை மேம்பாட்டு மாதிரிகளை மாநிலத்திலும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

நோக்கம் என்ன?

தொழில் துறையை பெங்களூரை தாண்டி கொண்டு செல்வதும், கன்னடர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எங்களின் நோக்கம். நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து, அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மை ஆகியற்றில் ஜப்பானின் நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து கண்டறிந்து உள்ளோம். டயோட்டோ ஆலை நிர்வாகம், நம் மாநிலத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். அங்குள்ள டாக்சி மாடல் காரை, ஹைபிரிட் மாடலில் தயாரிக்கும்படி கோரி உள்ளோம். இதனால், உள்ளூர் ஆட்டோக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. ஒலிம்பிக் போட்டியின் போது, உருவாக்கப்பட்ட வாகனத்தை, நம் நாட்டில் தயாரிக்கும்படி கேட்டு கொண்டு உள்ளோம். ஹரோஹள்ளியில் விரிவாக்கம் செய்வதற்காக கவாசாகி – விப்ரோ கவாசாகி நிறுவனத்துடன், 800 கோடி ரூபாய் ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளோம். ஜப்பானுடன் ஒப்பிடும்போது, நாம் மிகவும் பின் தங்கி உள்ளோம். மெட்ரோ திட்டங்களை பொறுத்தவரை, நாம் சரியாக திட்டமிடவில்லை. ஜப்பானில் விமான நிலையங்களை விட, ரயில் நிலையங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. மெட்ரோ நிலையங்களின் ஒவ்வொன்றின் மேல் பகுதியிலும் குறைந்தபட்சம் 10 – 30 லட்சம் சதுர அடியில் கட்டடங்களை கட்டி உள்ளனர். இது, வணிக பரிவர்த்தனைக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.

நகர்ப்புற வளர்ச்சி

பெங்களூரில் அடித்தளங்களில் வணிக இடங்கள், மெட்ரோ நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை மறுவடிவமைத்தல், முக்கிய சந்திப்புகளில் பாதசாரிகள், வாகன போக்குவரத்தை மேம்படுத்துதல் உட்பட வாய்ப்புகளை ஆராயும்படி நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். ஜப்பானியர்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பே குப்பையை அகற்றுவதில் புதிய செயல்முறையை, 200 இடங்களில் செயல்படுத்தி வருகின்றனர். அதே பாணியை நம் மாநிலத்திலும் செயல்படுத்த முடியும் என அவர்களுடன் பேச்சு நடந் தது. ஓயாசிஸ் 21 உட்பட நகோயாவின் விரிவான வணிக மற்றும் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை பார்வையிட்டோம். ஒசாகாவில் ஒரு நாளைக்கு 900 டன் கழிவுகளை பதப்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தை பார்வையிட்டோம். மாநிலத்தில் 2027 ஏப்ரல் 20 முதல் 22 வரை நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை