6 மாதங்களில் 3,237 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்
ஹாவேரி: ஹாவேரியில் கடந்த ஆறு மாதங்களில், 3,237 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஹாவேரியில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளன. தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமியரை கடித்து குதறுவது பல இடங்களில் நடக்கின்றன. இதில், பல குழந்தைகள் படுகாயம் அடைந்து உள்ளனர். தெருநாய்களின் முக்கிய இலக்காக குழந்தைகளே உள்ளனர். அதுமட்டுமின்றி, காலையில் வாக்கிங் செல்லும் முதியவர்களை துரத்துவது, பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகளின் காலை கடிப்பது போன்று பயமுறுத்துவது போன்றவைற்றை நாய்கள் செய்து வருகின்றன. மக்கள் பீதி கடந்த ஆறு மாதங்களில் ஹாவேரியில் 3,237 பேரை தெருநாய்கள் கடித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதை கேட்டு மக்கள் பீதி அடைந்து உள்ளனர். பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை தனியாக வெளியில் அனுப்ப பயப்படுகின்றனர். குறிப்பாக, ஹனகல், பையதகி, பன்காபுரா, சாவனுார், ஷிக்கான், ஹிரேகெரூர், ரட்டிஹள்ளி, குட்டாலா டவுன் ஆகிய பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை பிடிக்க வேண்டும் என நகராட்சி அலுவலகத்துக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பலரும் புகார் கூறுகின்றனர். 1,650 ரூபாய் இது குறித்து ஹாவேரி நகராட்சி மன்ற தலைவர் சசிகலா மல்கி கூறியதாவது: ஹாவேரி நகரில் மட்டும் 8,000 முதல் 10,000 வரை தெருநாய்கள் உள்ளன. தெருநாய்களை பிடிப்பது தொடர்பாக விலங்கு சுகாதாரத்துறையின் துணை ஆணையர், விலங்கு நல அமைப்புகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஒரு தெருநாய்க்கு கருத்தடை செய்ய 1,650 ரூபாய் தர வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கேட்டனர். இதுற்கு நகராட்சி ஒப்பு கொண்ட போதிலும், ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. இதுபோல, தெருநாய்களை பிடிப்பதற்கு மூன்று முறை டெண்டர் கோரினோம். ஆனால், யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. ஹாவேரி நகராட்சி நிர்வாகம் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.