தொழில் வளர்ச்சிக்கு விளை நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு! : தேவனஹள்ளியில் போராடிய விவசாயிகள் கைது
கே.ஐ.டி.பி.ஏ., எனும் பெங்களூரு தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், விண்வெளி மற்றும் தொழில்நுட்ப பூங்காவுக்காக, பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகா சன்னராயப்பட்டணா ஊராட்சிக்கு உட்பட்ட 13 கிராமங்களில் உள்ள 1,777 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும்' என்று அரசு அறிவித்திருந்தது. 1,178 நாட்கள்
நிலங்களை கையப்படுத்தினால், இதை நம்பி உள்ள 800 குடும்பத்தினர் பாதிக்கப்படுவர். எனவே, இந்த அறிவிப்பை வாபஸ் பெற கோரி, 2022 ஜனவரியில் விவசாயிகள் துவக்கிய போராட்டம், 1,178 நாட்களாக நடந்து வருகிறது.சன்னராயபட்டணாவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.தேவனஹள்ளி தாசில்தாரிடம் மனு வழங்கிய விவசாயிகள், '24 மணி நேரத்துக்குள், நிலம் கையகப்படுத்தும் அரசின் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், காலவரையின்றி எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நிலமே எங்களின் வாழ்வாதாரம். வளர்ச்சிக்கு ஏன் ஏழைகளின் நிலமே பறிக்கப்படுகிறது' என்று கேள்வி எழுப்பினர். இரவு முழுதும்
தேவனஹள்ளி பஸ் நிலையம் அருகில் நடந்த போராட்டத்தை, இரவு முழுதும் தொடர முடிவு செய்தனர். இதையறிந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், அது பலனளிக்கவில்லை. இதனால், போராட்டம் நடத்தி வந்த விவசாய தலைவர்கள் சிலரை, கைது செய்தனர்.விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் நேற்று சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் சிலர், முதல்வர் சித்தராமையா அலுவலக இல்லத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நீண்ட நேர காத்திருப்புக்கு பின், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.முதல்வர் சித்தராமையாவை சந்தித்த பிரகாஷ் ராஜ், 'எக்காரணத்துக்காகவும் கே.ஐ.டி.பி.ஏ.,வுக்கு 1,777 ஏக்கர் நிலத்தை 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் வழங்க மாட்டார்கள். அரசின் ஒரு தலைப்பட்ச முடிவு சரியல்ல.விவசாயிகள், ஆர்வலர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க வேண்டாம்' என்று கேட்டு கொண்டார்.அதற்கு முதல்வர் சித்தராமையா, 'விவசாயிகளின் கோரிக்கைகள், பிரச்னைகள் குறித்து ஜூலை 4ம் தேதி காலை 11:00 மணிக்கு விரிவாக விவாதிக்கப்படும்' என்றார். துரோகம்
சந்திப்புக்கு பின் வெளியே வந்த பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி:தொழில்நுட்ப பூங்கா அமைக்க, விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நில கையகப்படுத்தும் அறிவிப்புக்கு எதிராக, மூன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பா.ஜ., ஆட்சியின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா, இந்த இடத்தை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பதாக உறுதி அளித்திருந்தார்.ஆனால், இப்போது முதல்வரான பின், நிலம் கையகப்படுத்த இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது துரோகமாகும். ஜூலை 4ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்துவதாக முதல்வர் கூறியுள்ளார். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.