வகுப்பறையில் காதலை கூறிய பேராசிரியர் செருப்பால் அடித்த மாணவி, மாணவர்கள்
பெங்களூரு: பெங்களூரு நெலமங்களாவில் உள்ள மருத்துவ கல்லுாரி வகுப்பில், மாணவியிடம் காதலை வெளிப்படுத்திய பேராசிரியரை, செருப்பால் அடித்த மாணவி மற்றும் மாணவர்கள் வீடியோ வைரலானது. பெங்களூரு நெலமங்களாவின் டி.பேகூர் அருகில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி உள்ளது. இங்கு பேராசிரியராக முகமது பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது அவர், 'இந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி, என்னை காதலிப்பதாக தெரிவித்தார். நானும் அவரை காதலிக்கிறேன்' என்றார். இதற்கு குறிப்பிட்ட அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததுடன், இவ்விஷயத்தை கல்லுாரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள். இந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் வருவர் என்றார். அப்போது நடந்த விவாதம்: முகமது: நீ என்னை காதலிப்பதாக கூறவில்லையா? மாணவி: எப்போது கூறினேன். முகமது: கண்காணிப்பு கேமரா ஆதாரம் உள்ளது. மாணவி: ஆதாரத்தை காட்டுங்கள். முகமது: இவ்விஷயமாக நாளை உன்னிடம் பேசுகிறேன். மாணவி: எனக்கு பேச விருப்பமில்லை. உங்களுக்கு வழங்கிய சாக்லேட்டை சாப்பிடுங்கள் என, மாணவர்களிடம் கூறிவிட்டு சென்றார். இதனால், வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டது. பேராசிரியரை பின் தொடர்ந்த மாணவியும், மாணவர்களும் அவரை சரமாரியாக தாக்கினர். மாணவி, தான் அணிந்திருந்த செருப்பால், பேராசிரியர் முகமதுவை அடித்தார். கல்லுாரியில் பணியாற்றுபவர்களும், பேராசிரியருடன் சாக்லேட் வினியோகிக்க வந்தவர்களும் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக நெலமங்களா கிராமப்புற போலீஸ் நிலையத்தில் கேட்ட போது, இதுவரை எந்த தரப்பில் இருந்தும் புகார் வரவில்லை என்றனர்.