உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பலேபேட் சிவன் கோவிலுக்கு படையெடுக்கும் மாணவர்கள்

பலேபேட் சிவன் கோவிலுக்கு படையெடுக்கும் மாணவர்கள்

நகரத்திற்குள் பழமையான கோவில்கள் இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட பழமையான கர்நாடக கோவில்கள் பற்றி வாரந்தோறும் செவ்வாய் அன்று வாசகர்களுக்கு எடுத்து உரைக்கிறது நம் நாளிதழ். பெங்களூரு நகரில் உள்ள ஒரு பழமையான கோவிலில் தரிசனம் செய்வோமா?பெங்களூரு, பலேபேட் சதுக்கத்தில் உள்ளது ஸ்ரீ காசி விஸ்வேஸ்வரா சுவாமி கோவில். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் பல ஆண்டுகளுக்கு முன் காசியில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள தாக நம்பப்படுகிறது.

மிக பழமை

இந்த கோவில், கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பழமையானது. மிகவும் விசாலமாக காட்சி அளிக்கிறது. கோவிலின் மூலவராக ஸ்ரீ காசி விஸ்வேஸ்வரர், காசி விசாலாட்சி அருள்பாலிக்கின்றனர். சோமேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பஞ்சலிங்கேஸ்வரர், மஹா கணபதி, சுப்ரமணீஸ்வரர், ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயர், அன்னபூர்னேஸ்வரி, சாமுண்டீஸ்வரி, வீரபத்ரர், தட்சிணாமூர்த்தி, தத்தாத்ரேய சுவாமி, நாகதேவர், நவகிரஹங்கள், காலபைரவர், சண்முக சுவாமி ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.இந்த கோவிலில் மஹா சிவராத்திரி அன்று கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அன்றைய தினம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலரும் தங்கள் படிப்பிற்காக அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.அதேபோல வாரந்தோறும் சனிக்கிழமையில் நவகிரஹங்களுக்கும், செவ்வாய்க் கிழமையில் ராஜ ராஜேஸ்வரி, காசி விசாலாட்சி, சுப்ரமணீஸ்வரர், ஆஞ்சுநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பிரம்மரத உற்சவம் நடக்கும். அச்சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.பழமையான கோவில்களுக்கு சென்று இறை வழிபாடு செய்யும்போது, மனதினுள் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

எப்படி செல்வது?

பஸ்: பெங்களூரில் உள்ள எந்த பகுதிகளில் இருந்தும் பஸ்கள் மூலம் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு செல்லலாம். அங்கிருந்து, கோவிலை நடந்து சென்று அடையலாம்.ரயில்: நகரில் உள்ள எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும், கெம்பேகவுடா மெட்ரோ ரயில் முனையத்திற்கு வரவும். இதையடுத்து, ஆட்டோ மூலமோ அல்லது நடந்தோ கோவிலை அடையலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ