உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கேப்டன் யானையை விட 5,450 கிலோ எடையுடன் சுக்ரீவா டாப்

கேப்டன் யானையை விட 5,450 கிலோ எடையுடன் சுக்ரீவா டாப்

பெங்களூரு : இரண்டாம் கட்டமாக மைசூரு தசராவுக்கு வந்த ஐந்து யானைகளில், சுக்ரீவா யானை தான் அதிக எடையுடன் உள்ளது. மைசூரு தசராவில் பங்கேற்பதற்காக இரண்டாம் கட்டாக நேற்று முன்தினம் மைசூரு வந்த ஐந்து யானைகளுக்கு, நேற்று எடை பரிசோதனை செய்ய, அரண்மனையில் இருந்து கே.ஆர்., சதுக்கம், சாயாஜிராவ் சாலை, ஆயுர்வேதிக் சதுக்கம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டன. இத்துடன், முதற்கட்டமாக வந்த ஒன்பது யானைகள் உட்பட 14 யானைகளை ஒரே நேரத்தில் பார்த்த குழந்தைகள் ஆரவாரம் செய்தனர். அப்பகுதியில் இருந்த பலரும் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டனர். லாரிகளின் எடை கண்டறியும் இடத்தில், இரண்டாம் கட்டமாக வந்த யானைகளுக்கு எடை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், சுக்ரீவா 5,545 கிலோ; ஸ்ரீகண்டா 5,540; கோபி 4,990; ரூபா 3,320; ஹேமாவதி 2,440 கிலோ எடை உள்ளன. தசராவுக்கு வந்துள்ள 14 யானைகளில், கேப்டன் அபிமன்யுவை விட, சுக்ரீவா தான் அதிக எடையில் உள்ளது. கேப்டன் அபிமன்யு 5,360 கிலோ எடை கொண்டது. வனத்துறை அதிகாரி பிரபு கவுடா கூறியதாவது: தசராவுக்கு வந்துள்ள 14 யானைகளுக்கும் முழு பயிற்சி நேற்று முதல் துவங்கி உள்ளது. காலை, மாலை நேரங்களில் பயிற்சிக்கு பின், சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. நகரின் சீதோஷ்ண நிலைக்கு ஒன்பது யானைகளும் பழகிவிட்டன. தற்போது வந்துள்ள ஐந்து யானைகளும் விரைவில், இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தயாராகும். ஊர்வலத்தின்போது யானைகள் அருகில் வந்து செல்பி எடுப்பதோ, பிளாஷ் லைட் அடிப்பதோ வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். ... யானைகளின் பயோ டேட்டா ... பெயர்: கோபி, 42. உயரம்: 2.50 மீட்டர் நீளம்: 3.42 மீட்டர் எடை : 4,990 கிலோ பாகன்: நவீன் குமார் உதவியாளர்: சிவு வசிக்கும் இடம்: துபாரே யானைகள் முகாம் பிடிபட்டது: 1993ல் ஷிவமொக்கா மாவட்டம் காரேகொப்பா. ** பெயர்: சுக்ரீவா வயது: 43 உயரம்: 2.95 மீட்டர் நீளம்: 2.45 மீட்டர் எடை: 5,545 கிலோ பாகன்: சிங்கரா உதவியாளர்: ராஜு வசிக்கும் இடம்: துபாரே யானைகள் முகாம் பிடிபட்டது: 2016ல் குடகு மாவட்டம் குஷால் நகர். *** பெயர்: ஸ்ரீகண்டா வயது: 50 உயரம்: 2.86 மீட்டர் நீளம்: 3.25 மீட்டர் எடை: 5,540 கிலோ பாகன்: ராதா கிருஷ்ணா உதவியாளர்: ஓம்கார் வசிக்கும் இடம்: மத்திகோடு யானைகள் முகாம் பிடிபட்டது: 2014ல் ஹாசன் மாவட்டம் வனப்பகுதி. *** பெயர்: ரூபா வயது: 44 உயரம்: 2.45 மீட்டர் நீளம்: 2.90 மீட்டர் எடை: 3,320 கிலோ பாகன்: மஞ்சுநாத் உதவியாளர்: மஞ்சு வசிக்கும் இடம்: துபாரே யானைகள் முகாம் பிடிபட்டது: 2016ல் சர்க்கஸ் நிறுவனத்தில் இருந்து வனத்துறையினர் மீட்டனர் *** பெயர்: ஹேமாவதி வயது: 11 உயரம்: 2.25 மீட்டர் நீளம்: 2.80 மீட்டர் எடை: 2,240 கிலோ பாகன்: நயாஸ் பாஷா உதவியாளர்: ஜலீல் வசிக்கும் இடம்: துபாரே யானைகள் முகாம் பிடிபட்டது: 2014ல் துபாரே யானைகள் முகாமில் பிறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி