சுகாஸ் ஷெட்டி பெற்றோர் கவர்னர் கெலாட்டுடன் சந்திப்பு
பெங்களூரு: சுகாஸ் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் சுகாஸ் ஷெட்டியின் பெற்றோர், பா.ஜ., தலைவர்கள் நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.மங்களூரின் கின்னிபதவு பகுதியில் கடந்த 1ம் தேதி பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.சுகாஸ் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு மாநில அரசு மறுத்துவிட்டது.இந்நிலையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை ராஜ்பவனில், சுகாஸ் தந்தை ராஜேஷ், தாய் சுலோச்சனா, பா.ஜ., தலைவர்கள் நேற்று சந்தித்தனர். சுகாஸ் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி மனு அளித்தனர்.பின், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:சுகாஸ் கொலையில் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்ற எங்கள் நம்பிக்கை பொய்த்துவிட்டது. சுகாஸ் கொலையை கண்டித்து மங்களூரில் பேரணி நடத்த முடிவு செய்து இருந்தோம். ஆனால் ஆப்பரேஷன் சிந்துார் துவங்கப்பட்டு உள்ளதால், அமைதியை பேணி வருகிறோம்.சுகாஸ் கொலைக்கு பல கார்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் இரண்டு கார்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலையில் 30 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் உள்ளது.ஆனால் இதுவரை எட்டு பேர் மட்டும் கைதாகி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததாக தகவல் உள்ளது.சுகாஸ் கொலையை தொடர்ந்து மேலும் இரண்டு ஹிந்து தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.சுகாஸ் கொலையில் கைதான ஆதில் என்பவரை பாதுகாக்கும் முயற்சியில், சபாநாயகர் காதர் ஈடுபட்டார். நாங்கள் இந்த வழக்கில் அரசியல் செய்யவில்லை.ஹிந்து தலைவர்கள், தொண்டர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. சுகாஸ் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் உண்மை வெளிவரும்.இதுபற்றி மாநில அரசுக்கு உத்தரவிடும்படி கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம். ஒருவேளை அரசு உத்தரவிடவிட்டால், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படியும் கேட்டுள்ளோம்.பாகிஸ்தானியர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பும் விஷயத்தில், காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. இது தொடர்பாகவும் கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.