பள்ளிகள் துவங்கும் முன் பாடப்புத்தகங்கள் சப்ளை
பெங்களூரு: கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:கோடை விடுமுறை முடிந்து, பள்ளி வகுப்புகள் துவங்கும் முன்பே, மாணவர்களின் கைகளுக்கு பாட புத்தகங்கள் கிடைக்க வேண்டும். இதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம். கர்நாடக பாட புத்தகங்கள் சங்கம், பாட புத்தகங்கள் வழங்கும் பணியை துவக்கியுள்ளது. சில தாலுகாக்களுக்கு ஏற்கனவே 50 சதவீதம் பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும், பெறாத பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பொறுப்பு, கர்நாடக பாட புத்தகங்கள் சங்கத்திடம் உள்ளது. தற்போதைய புள்ளி விபரங்களின்படி, அரசு பள்ளிகளில் 55.44 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் 46.78 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு வினியோகிக்க 10 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சிட, 'டெண்டர்' அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. அச்சிட்டு முடிக்கப்பட்ட புத்தகங்கள், அந்தந்த தாலுகாக்களுக்கு அனுப்பப்படுகின்றன. பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் கொண்டு சேர்க்க, நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புத்தகங்களை கொண்டு சேர்க்கின்றனர்.தனியார் பள்ளிகளின் கோரிக்கைக்கு தகுந்தபடி, புத்தகங்கள் வினியோகிக்கப்படும். 10 சதவீதம் முன் பணம் செலுத்தி, புத்தகங்களுக்கு வேண்டுகோள் விடுத்த பள்ளிகள், 100 சதவீதம் தொகையை செலுத்திய பின், புத்தகங்களை அனுப்ப வேண்டும். முந்தைய ஆண்டுகளில் பாக்கியுள்ள தொகையை வசூலிக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு, முழுமையான அளவில் புத்தகங்கள் வினியோகிக்க வேண்டும். புத்தகங்கள் பெறும் மாணவர்கள் பற்றிய தகவல்களை, டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.