உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உயிருடன் இருப்பவர் இறந்ததாக பதிவு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் அவதி

 உயிருடன் இருப்பவர் இறந்ததாக பதிவு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் அவதி

மாண்டியா: அதிகாரிகள் செய்த குளறுபடியால், உயிரோடுள்ள நபரின் ஆவணங்களில் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் கிடைக்காமல், அவர் அவதிப்படுகிறார். மாண்டியா நகர், குத்தலு லே - அவுட்டின் திப்பு சாலையில் வசிப்பவர் சபீவுல்லா கான். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக, நியாய விலைக்கடையில் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், ரேஷன் கார்டில் 'கேஒய்சி லிங்க்' செய்ய சென்றார். அப்போது அதிகாரிகள் கூறியதை கேட்டு, அதிர்ச்சி அடைந்தார். 'நீங்கள் 2024லேயே இறந்துவிட்டதாக, தகவல் பதிவாகியுள்ளது' என கூறினர். அதன்பின் சபீவுல்லா கான், நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, விசாரணை நடத்தினார். அப்போது மாண்டியாவின் மிம்ஸ் மருத்துவமனை அளித்த இறப்பு அறிக்கை அடிப்படையில், நகராட்சி இறப்பு சான்றிதழ் அளித்ததாக ஊழியர்கள் கூறினர். யாரோ செய்த தவறால் சபீவுல்லா கானின் பெயர், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. உயிரோடு உள்ள அவரை, இறந்தவர் என, ஆவணங்கள் காட்டுகின்றன. அவரது வங்கி பரிவர்த்தனைகளும் பாதித்துள்ளன. தன் பிரச்னையை சரி செய்யும்படி, அரசு அலுவலகங்களுக்கு அலை பாய்ந்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இது குறித்து, புகார் அளிக்க போலீஸ் நிலையத்துக்கு சென்றால், அங்கும் உதவி கிடைக்கவில்லை. மேற்கு போலீஸ் நிலையத்துக்கு சென்றால், 'வழக்கு எங்கள் எல்லைக்குள் வராது. கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள்' என்கின்றனர். கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்றால், மீண்டும் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அனுப்புகின்றனர். 'நான் உயிரோடு இருக்கிறேன். என் ஆவணங்களை சரி செய்து, எனக்கு நியாயம் கிடைக்க செய்யுங்கள்' என சபீவுல்லா கான் கண்ணீர் விடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி