பா.ஜ., சலவாதி நாராயணசாமிக்கு கத்தி அனுப்பி வைத்த மர்ம நபர்கள்
பெங்களூரு: மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி வீட்டிற்கு, ‘பிளிங்கிட்’டில் கத்தி ஆர்டர் செய்து மர்மநபர்கள் அனுப்பி வைத்துள்ளனர். கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி. பா.ஜ.,வை சேர்ந்தவர். கடந்த 3ம் தேதி கோலாரில் நடந்த பா.ஜ., நிகழ்ச்சியில், ‘காங்கிரசை துண்டு, துண்டாக வெட்டி அரபி கடலில் வீச வேண்டும்’ என்று பேசினார். காங்கிரசார் அளித்த புகாரில் அவர் மீது கோலார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பெங்களூரு வசந்த்நகரின் ‘செவன் மினிஸ்டர்ஸ் குவாட்டர்ஸ்’ பகுதியில் உள்ள, சலவாதி நாராயணசாமியின் அரசு வீட்டிற்கு நேற்று காலை, ‘ஆன்லைன்’ பொருட்கள் விற்பனை நிறுவனமான ‘பிளிங்கிட்’டில் இருந்து, இரண்டு ஊழியர்கள் பைக்கில் வந்தனர். ‘சலவாதி நாராயணசாமி பெயரில் பார்சல் வந்துள்ளது. அவரிடம் கொடுக்க வேண்டும்’ என்று கூறினர். பாதுகாப்பு போலீசார் பார்சலை வாங்கி பிரித்தபோது அதற்குள் கத்தி இருந்தது தெரிந்தது. பிளிங்கிட் ஊழியர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதுகுறித்து சலவாதி நாராயணசாமி கூறியதாவது: கர்நாடகாவில் குண்டர் கலாசாரத்தை நெடுங்காலமாக பார்த்து வருகிறேன். எனது வீட்டிற்கு கத்தி ஆர்டர் செய்து அனுப்பியதே இதற்கு சாட்சி. காங்கிரசை துண்டு, துண்டாக வெட்டி கடலில் வீச வேண்டும் என்று கூறியதால், எனது வீட்டிற்கு கத்தி ஆர்டர் செய்து அனுப்பி உள்ளனர். யாரிடம் கத்தி பயன்படுத்தும் கலாசாரம் உள்ளது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனது வீட்டிற்கு வந்த கத்தியை ஆர்டர் செய்தவர்கள் அதற்கு பணம் செலுத்தவில்லை. அப்படி செலுத்தி இருந்தால் அதை வாங்கி காய்கறி நறுக்க பயன்படுத்தி இருப்போம். நான் கத்தியை கண்டு பயப்படும் நபர் இல்லை. எனது உடலில் உண்மையான அம்பேத்கர் ரத்தம் ஓடுகிறது. காங்கிரஸ் எத்தனை கத்திகள் வேண்டுமென்றாலும் அனுப்பட்டும். எனது வீட்டில் பரிசாக வைத்து கொள்வேன். வினய் குமார் என்ற நபர் பெயரில் கத்தி முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண் சிமிட்டும் நேரத்தில் எனக்கு நிறைய மிரட்டல் மொபைல் போன் அழைப்புகள் வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.