| ADDED : ஆக 22, 2026 01:35 AM
பெங்களூரு: பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட தனியார் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பெங்களூரு ரிச்சட்ஸ் டவுன் பாட்டரி சாலையில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலை பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும், 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்படத்தை அடுத்து, பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. பின், பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பெங்களூரு வடக்கு மாநகராட்சி கமிஷனர் பொம்மலா சுனில்குமாரின் அறிவுறுத்தலின் படி, பள்ளியில் உள்ள மாணவ - மாணவியர், ஆசிரியர்களுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,729. இதில், நேற்று வரமஹாலட்சுமி பண்டிகை என்பதால், 317 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. மீதமுள்ள, 1,412 மாணவர்களுக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ஆசிரியர் உட்பட சக பணியாளர்கள் என 139 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 184 மாணவர்களுக்கு லேசான காய்ச்சல், மூக்கடைப்புஇருப்பது தெரிய வந்தது. புதிதாக யாருக்கும் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்படவில்லை. காய்ச்சல், சுவாச கோளாறு அறிகுறிகள் இருக்கும் மாணவர்கள் குறித்து உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு, பள்ளி நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். வரும் நாட்களிலும், பள்ளி தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.