ஜெயலலிதா நகைகளை எடுத்து செல்ல தமிழக போலீசார் இன்று பெங்., வருகை
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகளை எடுத்து செல்ல, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று பெங்களூரு வருகின்றனர்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில், 1996ம் ஆண்டு டிசம்பர் 7 முதல் 12ம் தேதி வரை போயஸ் கார்டன் வீட்டில், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இதில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய ஆறு டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், 27 பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொருட்கள் ஏலம்
ஜெயலலிதா வழக்கு பெங்களூரில் நடந்ததால், வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் இங்கு எடுத்து வரப்பட்டன. பொருட்கள் அனைத்தும் கர்நாடக அரசின் கருவூலத்தில் இருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடக அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது.இதற்கிடையில், ஜெயலலிதாவின் பொருட்களுக்கு அவரது வாரிசுகள் என்று கூறப்படும் தீபா, தீபக் உரிமை கொண்டாடினர். பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி, அவர்கள் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்தது. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக, நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மோகன் கூறிய தீர்ப்பில், 'ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய ஆறு பெட்டிகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரத்தை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம், பிப்ரவரி 14, 15ம் தேதிகளில் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும். பாதுகாப்பு வசதி
'பொருட்களை எடுத்து செல்ல வரும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெட்டிகளுடன் வர வேண்டும். பொருட்களை கொண்டு செல்ல உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பொருட்களை எடுத்து செல்லும் போது, மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். இந்த நடைமுறையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தார்.இதன்படி ஜெயலலிதா நகைகளை எடுத்து செல்ல, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று பெங்களூரு வருகின்றனர். சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று காலை 10:30 மணிக்கு நகைகளை ஒப்படைக்கும் பணி நடக்கிறது.