உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாரம்மா கோவிலுக்கு பூட்டு மாண்டியா கிராமத்தில் பதற்றம்

மாரம்மா கோவிலுக்கு பூட்டு மாண்டியா கிராமத்தில் பதற்றம்

மாண்டியா: மாண்டியாவின் பிரசித்தி பெற்ற மாரம்மா கோவிலில் தலித் சமுதாயத்தினர் நுழைந்ததால், இரண்டு சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.மாண்டியா நகரின் எலசாகனஹள்ளி கிராமத்தில், மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் அக்கம், பக்கத்து நகரங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.ஜூன் 3ம் தேதி, தலித் சமுதாயத்தை சேர்ந்த சிலர், கோவிலில் நுழைந்து பூஜை செய்தனர். இதனால் உயர் ஜாதியினர் கோபமடைந்தனர். அன்று நள்ளிரவில் தலித் சமுதாய தலைவர் விஜயபகுமாரின் கார் மீது, உயர் சமுதாயத்தினர் கல்லெறிந்து கண்ணாடியை உடைத்தனர். அவரது ஜாதி பெயரை கூறித் திட்டினர்.இதுதொடர்பாக, மாண்டியா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் நுழைந்ததால், தலித் சமுதாயத்தினரை உயர் சமுதாயத்தினர் ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தால் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.தகவலறிந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள், மாரம்மா கோவிலுக்கு பூட்டுப் போட்டுள்ளனர். அதன் மீது கிராமத்தினர் மற்றொரு பூட்டுப் போட்டுள்ளனர். அதிகாரிகள் எச்சரித்தும் கூட, தலித்துகளை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என, உயர் சமுதாயத்தினர் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதற்கு தலித் சமுதாயத்தினர் கோபம் அடைந்துள்ளனர்.முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை