உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சு தோல்வியால் பதற்றம்

 போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சு தோல்வியால் பதற்றம்

பெங்களூரு: போக்குவரத்து ஊழியர்களுடன் நேற்று நடந்த பேச்சு தோல்வியில் முடிந்ததால், இன்று முதல்வருடன் கூட்டம் நடத்தவில்லை என்றால், திட்டமிட்டபடி நாளை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடபோவதாக, போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். எச்சரிக்கை ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு; நிலுவையில் உள்ள 38 மாத ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் மாநில அரசோ 12.5 சதவீத ஊதிய உயர்வும், 26 மாத நிலுவை தொகையும் வழங்குவதாக தெரிவித்தது. இதை கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஏற்கவில்லை. எனவே, நாளை காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நேற்று போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், சங்கத்தினர் பேச்சு நடத்தினர். கூட்டம் முடிந்ததும், கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் கூறுகையில், 'கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அரசு தரப்பில் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். எங்களின் கோரிக்கைகள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. எனவே நாளை (இன்று) முதல்வருடன் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். முதல்வருடன் கூட்டம் நடக்கவில்லை என்றால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும்' என்றனர். 1.20 கோடி பேர் இதற்கிடையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த வீட்டு பணி செய்யும் வேதவதி, கட்டட தொழிலாளர் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தனர். மனுவில், 'மாநிலத்தில் தினமும் 1.20 கோடி பேர் அரசு பஸ்சில் பயணித்து வருகின்றனர். இதில், 60 சதவீதம் பேர் பெண்கள். சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். 'எஸ்.எஸ்.எல்.சி., துணை தேர்வுகள், ஏற்கனவே துவங்கி, மே 25 வரை நடக்கிறது. இதற்காக கிராமம், டவுன் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், இவர்கள் பாதிக்கப்படுவர். 'இது தவிர, பஸ்சை நம்பி உள்ள தினக்கூலிகள், உடல் நலம் பாதித்தவர்கள், மூத்த குடிமக்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பாதிக்கப்படுவர். 'ஏற்கனவே, 2023, 2025ல் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால், போராட்டம் திரும்ப பெறப்பட்டது. கடந்த 2025 ல் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும், சில இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக, 17,200 ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளன. 'எனவே, மாநில அரசும், போக்குவரத்து கார்ப்பரேஷனும், ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர். இம்மனு மீது, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kalyanaraman Andhukuru.R.
மே 21, 2026 20:36

போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் அரசாங்கம் சொல்லியபடி வேலைக்குச் சென்று அவர்களுடைய எதிர்ப்பை பிரதிபலிக்க வேண்டும். பயணிகள் யாருக்கும் டிக்கெட் கொடுக்காமல் மக்கள் அனைவரையும் இலவச பயணமாக பயணிகளை கையாள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை