உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மகனை போன்று வளர்த்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற சிறுவன்

மகனை போன்று வளர்த்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற சிறுவன்

ஹாசன்: பெற்ற மகனை போன்று வளர்த்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவின் ஜாவகல் கிராமத்தில் 45 வயது பெண் வசித்து வந்தார். சிறு வயதிலேயே கணவரை இழந்தவர். இவரது பக்கத்து கிராமத்தில் வசிக்கும் நபரின் வீட்டில் வேலை செய்தார். இந்த வீட்டின் உரிமையாளர், சாலையில் அநாதையாக வீசப்பட்ட ஆண் குழந்தையை, தன் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்த்து வந்தார். இவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணும், அக்குழந்தையை தாய் போன்று பராமரித்தார். உணவு ஊட்டுவது, பள்ளிக்கு அனுப்புவது என, அனைத்தையும் அவரே செய்தார். தனக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால், மகனை போன்று கருதி அந்த சிறுவனுக்கு, ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என்பது, பெண்ணின் கனவாக இருந்தது. செப்டம்பர் 15ம் தேதி, பணிக்கு சென்ற பெண், மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கத்தினர் போன் செய்த போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே பக்கத்து ஊரில், வாழைத்தோப்பில் அப்பெண் இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு வந்த ஜாவகல் போலீசார், பெண்ணின் உடலை மீட்டனர். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீசாரும், கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது கிராமத்தை சேர்ந்த ஒரு நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணும், மகன் போன்று வளர்த்த சிறுவனும் வாக்குவாதம் செய்ததை பார்த்ததாக, போலீசாரிடம் கூறினார். அதன் அடிப்படையில், சிறுவனிடம் போலீசார் விசாரித்தனர். அப்பெண்ணை பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த சிறுவன் மட்டுமே, இந்த செயலை செய்திருக்க முடியாது. கொலையில் வேறு நபர்களுக்கும் தொடர்பிருக்கலாம். ஆழமாக விசாரிக்க வேண்டும். கொலையாளியை சிறுவன் என்று கருதாமல் கடுமையாக தண்டிக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ