உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காவிரி ஆரத்தியில் குவிந்த குப்பை இரவே சுத்தம் செய்த குடிநீர் வாரியம்

காவிரி ஆரத்தியில் குவிந்த குப்பை இரவே சுத்தம் செய்த குடிநீர் வாரியம்

பெங்களூரு: ஜீவநதியான காவிரியை வணங்கும் நோக்கில், ஏற்பாடு செய்யப்பட்ட 'காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி முடிந்தவுடன், சாங்கே ஏரியை பெங்களூரு குடிநீர் வாரிய ஊழியர்கள் இரவோடு, இரவாக சுத்தம் செய்தனர். கர்நாடக ஜீவநதியான காவிரியை கவுரவிக்கும் வகையில், கர்நாடக அரசு இம்மாதம் 21ம் தேதியன்று காவிரி ஆரத்தி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. பெங்களூரின், மல்லேஸ்வரத்தில் உள்ள சாங்கே ஏரிக்கரையில், காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்ற பின், குடிநீர் வாரிய தலைவர் ராம பிரசாத் மனோகர் உட்பட, ஊழியர்கள் வீட்டுக்கு செல்லாமல், காவிரி ஆரத்தி நிகழ்ச்சியால் பரவி கிடந்த குப்பை கழிவுகளை சுத்தம் செய்தனர்.இரவு 10:30 மணிக்கு துவங்கிய பணி, அதிகாலை 3:00 மணி வரை நடந்தது. நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் வகையில் பணியாற்றிய குடிநீர் வாரிய தலைவர் ராம பிரசாத் மனோகர், உடற் சோர்வை பொருட்படுத்தாமல், தானே முன்னின்று துாய்மை பணியில் ஈடுபட்டு, ஊழியர்களை உற்சாகப்படுத்தினார். காலை நடை பயிற்சிக்கு வந்தவர்கள், ஏரி பகுதி துாய்மையாக இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இரவோடு இரவாக நிகழ்ச்சி நடந்த இடத்தை சுத்தமாக்கிய குடிநீர் வாரிய ஊழியர்களை பாராட்டினர். இது குறித்து, ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:நீர் நிலைகளை பாதுகாப்பது, எங்களின் முக்கிய நோக்கமாகும். நீர் பாதுகாப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காவிரி ஆரத்தி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை சுத்தம் செய்வது, எங்களின் கடமையாகும்.சாங்கே ஏரி சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆங்காங்கே குப்பை கூடைகள் வைக்கப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த பின் சுத்தம் செய்தோம். ஏரி வளாகம் மட்டுமின்றி, சுற்றுப்புற சாலைகளும் சுத்தம் செய்யப்பட்டன. எங்களுடன் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களும் பணியாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை