நிர்வாக தீர்ப்பாயத்தின் கையில் துவக்க பள்ளியின் 451 பேர் எதிர்காலம்
- நமது நிருபர் -: 'கர்நாடகாவில் துவக்க பள்ளிக்கு ஆட்சேர்ப்பு வழக்கில், கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு கூற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. கர்நாடகாவில் 35 கல்வி மாவட்டங்களில் துவக்க பள்ளிகளுக்கு 15,000 ஆசிரியர் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு பின் தற்காலிக தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஓ.பி.சி., பிரிவில் விண்ணப்பித்த பல பெண் தேர்வர்கள், தங்கள் கணவரின் பெயருக்கு பதிலாக, தந்தையின் பெயரில் வழங்கப்பட்ட ஜாதி, வருமான சான்றிதழ் சமர்ப்பித்ததால் அவர்கள் பெயர்கள் பொது பட்டியலில் சேர்க்கப்பட்டன. தங்களை ஓ.பி.சி., பிரிவில் சேர்க்க அரசுக்கு உத்தரவிட கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 2023ல் உயர் நீதிமன்றம், தற்காலிக தகுதி பட்டியலை ரத்து செய்தது. இறுதி பட்டியலில் முதல் பட்டியலில் இருந்த 451 பெயர்கள் நீக்கப்பட்டன. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் என்று கூறியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். உயர் நீதிமன்றம் கூறியதில் எந்த சட்டவிரோதமும் இல்லை' என, நீதிபதிகள் கூறினர். இதனால் 451 பேரின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பு, கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்திடம் தற்போது உள்ளது.