மைக்ரோ நிதி நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் அவசர சட்டத்தை திருப்பி அனுப்பினார் கவர்னர்
பெங்களூரு: கடனை வசூலிக்கும் பெயரில், மக்களை இம்சிக்கும் மைக்ரோ நிதி நிறுவனத்துக்கு கடிவாளம் போட, பிறப்பித்த அவசர சட்டத்தை, சில விளக்கங்கள் கேட்டு, கர்நாடக அரசுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் திருப்பி அனுப்பியுள்ளார்.கர்நாடகாவில் சமீப நாட்களாக மைக்ரோ நிதி நிறுவனத்தின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடன் வசூலிக்கும் பெயரில் மக்களை கஷ்டப்படுத்துகின்றன. நிறுவன ஊழியர்களின் இம்சை தாங்காமல், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.இதை தீவிரமாக கருதிய மாநில அரசு, மைக்ரோ நிதி நிறுவனத்தை கட்டுப்படுத்த அவசர சட்டத்தை, முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றியது. அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பியது.இந்த அவசர சட்டத்தில் கையெழுத்திடாமல், சில விளக்கங்கள் கேட்டு அரசிடமே கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார்.கவர்னர் எழுப்பிய சந்தேகங்கள்: அவசர சட்டத்தில் கடன் பெற்றவர்களின் பாதுகாப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பொது நியாயப்படி, கடன் கொடுத்தவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் தென்படவில்லை மைக்ரோ நிதி நிறுவனம், மூன்று லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கடன் கொடுப்பது இல்லை. இந்நிலையில், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் எப்படி விதிக்க முடியும்? கடன் வாங்குவோரிடம், எந்த ஆவணங்களையும் பெறக்கூடாது என, கூறியுள்ளீர்கள். இந்த விதியை, அரசு சார்ந்த நிறுவனங்களிடம் கடன் பெறும்போதும், பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் தண்டனை காலம் 10 ஆண்டுகள் என அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எந்த லாஜிக்கும் இல்லை. நியாயமான முறையில், கடன் கொடுப்போரையும், இது பாதிக்கும். நேர்மையாக கடனை திருப்பி செலுத்துவோருக்கும் தொந்தரவு ஏற்படும் அவசர சட்டம் குறித்து, சட்டசபை கூட்டத்தொடரில் விவாதியுங்கள். இப்போது உள்ள சட்டங்களிலேயே, போலீசார் சரியாக நடவடிக்கை எடுப்பது இல்லை போலீஸ் துறை ஒருங்கிணைப்புடன், தற்போதுள்ள சட்டங்களை சரியாக பயன்படுத்தினால், சூழ்நிலையை சரியாக்கலாம். மற்றொரு சட்டம் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.