நம்ம மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இதயம்
பெங்களூரு: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, யஷ்வந்த்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சம்பிகே சாலை மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயிலில் மனித இதயம் எடுத்துச் செல்லப்பட்டது. பெங்களூரில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், சாலை மார்க்கமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, மனித உடல் உறுப்புகளை எடுத்துச் செல்வது கடினமான காரியம். எனவே, மெட்ரோ ரயிலில் உடல் உறுப்புகளை எடுத்துச் செல்வதே சிறந்த வழி என்ற நிலை உருவாகி உள்ளது. கடந்த மாதம் அறுவை சிகிச்சைக்காக ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ராஜராஜேஸ்வரி மெட்ரோ ரயில் நிலையம் வரை மனித கல்லீரல் எடுத்துச் செ ல்லப்பட்டது. இதன் மூலம், சாலை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து, நோயாளி ஒருவருக்கு கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது பெங்களூரு நம்ம மெட்ரோ ரயிலின் சாதனையாக கருதப்பட்டது . நேற்று முன்தினம் இரவு மெட்ரோ ரயில் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, இதயம் எடுத்துச் செல்லப்பட்டதாக நேற்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள் ளது. யஷ் வந்த்பூரில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் மனித இதயத்தை ரயிலில் எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 11:01 மணிக்கு யஷ்வந்த்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இதயத்துடன், ஏழு டாக்டர்கள் புறப்பட்டனர். 11:21 மணிக்கு சம்பிகே சாலை மெட்ரோ நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. வெறும் 20 நிமிடங்களில் இதயம் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பயணத்தில் டாக்டர்கள் குழுவினருக்கு தேவையான வசதிகளை மெட்ரோ அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.