பெங்களூரில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் வசித்தவர்கள்... வங்கதேசத்தினர்!: பா.ஜ., முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் அதிர்ச்சி தகவல்
பெங்களூரு 'பெங்களூரு கோகிலு லே - அவுட்டில், வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் வசித்த அனைவரும் வங்கதேசத்தினர்' என, பா.ஜ., முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக குடிபெயர்ந்தது குறித்து, தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். பெங்களூரு கோகிலு லே - அவுட்டில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 167 வீடுகள், கடந்த மாதம், 20ம் தேதி இடிக்கப்பட்டன. இந்த வீடுகளில் வசித்தோர் தெருக்களில் வசித்தனர். குழந்தைகள், கர்ப்பிணியர் குளிரில் வாடுவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. இதை குழந்தைகள், பெண்கள் உரிமைகள் ஆணையம் நேரில் ஆய்வு செய்தது. மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரியும் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள் வைத்தார். வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு, கர்நாடக வீட்டு வசதி துறையின் ராஜிவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பையப்பனஹள்ளியில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. சிக்கல் நேற்றே வீடுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று யாருக்கும் வீடு வழங்கப்படவில்லை. தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படுவதாக, வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறினார். இன்று வீடுகள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இன்றும் வீடுகள் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. தகுதியானவர்கள் பட்டியல் இன்னும் தங்களுக்கு வரவில்லை என்று, வீட்டு வசதி துறை அதிகாரிகள் நேற்று மாலை தெரிவித்தனர். இதற்கிடையில், வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ., தலைவர்கள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அங்கு வசித்தவர்களிடம் ஆதார், பான், வாக்காளர் அட்டைகளை வாங்கிப் பார்த்தனர். நிவாரணம் இந்நிலையில், மல்லேஸ்வரம் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் துணை முதல்வருமான அஸ்வத் நாராயணா நேற்று அளித்த பேட்டி: கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் வசித்த அனைவரும் வங்கதேசத்தினர். இந்த உண்மை எனக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அரசியலுக்காக ஏதோ சொல்ல வேண்டும் என்று நான் கூறவில்லை. பொறுப்பான பதவியில் இருந்து பேசுகிறேன். வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக இங்கு வந்து குடியேறி உள்ளனர். இவர்கள் யாருக்கும் அரசிடம் இருந்து நிவாரணம் பெற தகுதியில்லை. வங்கதேசத்தினர் நமது நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைவது, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். பையப்பனஹள்ளியில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை, வீடுகளை இழந்தோருக்கு வழங்க உள்ளதாக கூறுகின்றனர். ஒரு வீட்டின் விலை, 11.20 லட்சம் ரூபாய என்று, வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகிறார். வீட்டின் உண்மையான விலையே அவருக்கு தெரியவில்லை. வங்கதேசத்தினர் இங்கு வசிப்பது குறித்து, என்.ஐ.ஏ., விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் அளித்த பேட்டி: போராட்டம் கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் வசித்த வெளிநாட்டவருக்கு வீடுகள் வழங்கினால், நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கேட்போம். அரசு மீது கவர்னரிடம் புகார் அளிப்போம். காங்கிரஸ் மேலிடம், கேரள முதல்வர், பாகிஸ்தான் கூறியதால், அவசர, அவசரமாக வீடுகள் கொடுக்க சித்தராமையா அரசு முடிவு செய்து உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்துள்ள சிறுபான்மையினர் வீதி, வீதியாக சுற்றுகின்றனர். இதுவரை எந்த அரசும் அவர்களுக்கு வீடு வழங்கவில்லை. ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் வேண்டாத வேலை பார்க்கிறது. ஓட்டு வங்கிக்காக இதை செய்கின்றனர். உண்மை நிலையை கண்டறிய, ஐந்து பேர் குழுவை பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அமைத்து உள்ளார். அந்த குழுவினர் அனைத்து தகவலையும் சேகரிப்பர். பையப்பனஹள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு கூட, இன்னும் வீடுகள் வழங்கவில்லை. தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கொடுக்க முன்வந்து உள்ளனர். இதனை கண்டித்து வரும், 5 ம் தேதி சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
90 குடும்பத்திற்கு வீடு
நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் கூறுகையில், ''கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் வசித்தவர்கள், அனைவரும் ஏழைகள். கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கு வசிக்கின்றனர். அங்கு வசித்த, 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 90 குடும்பத்தினர் மட்டுமே கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்து உள்ளோம். அவர்களுக்கு மட்டுமே வீடு கிடைக்கும். மற்ற குடும்பத்தினர், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள். பா.ஜ., தலைவர்கள் கூறுவது போல வங்கதேசத்தினர் இல்லை,'' என்றார்.
யோசித்து பேசணும்
வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அக மது கான் கூறுகையில், '' எனக்கு தெரிந்து கோகிலு லே - அவுட் பகுதியில் வங்கதேசத்தினர் வசிக்கவில்லை. அப்படியே வசித்தாலும் அவர்களுக்கு அரசு வீடு கொடுப்பது சாத்தியமா. எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் யோசித்து பேச வேண்டும்,'' என்றார்.
பொய் பேசுகின்றனர்
கோகிலு லே - அவுட்டில் பகுதியில் வசிக்கும் கன்னடர்கள் கூறுகையில், '' வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் வங்கதேசத்தினர் யாரும் வசிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்டோர் ஒரு சிலரிடம் மட்டுமே பேசினர். எங்களிடம் பேசவே இல்லை. இங்கு வங்கதேசத்தினர் வசிப்பதாக சில தலைவர்கள் பொய் பேசுகின்றனர்,'' என்றனர்.