மேலும் செய்திகள்
இளநீர் விலையில் மாற்றமில்லை
30-Jun-2025
பெங்களூரு: மழைக்காலத்திலும் இளநீரின் விலை 80 ரூபாயை எட்டியுள்ளது. தென்னை மரங்களை நன்றாக பராமரித்தால், நல்ல லாபம் கிடைக்கும் என, வல்லுநர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.பொதுவாக கோடையில், இளநீர் விலை அதிகரிப்பது வழக்கம். 40 ரூபாயில் இருந்து, 70 ரூபாயாக அதிகரிக்கும். அதேபோல் இம்முறை கோடையின்போது ஒரு இளநீரின் விலை 75 ரூபாய் வரை எட்டியது. மழைக்காலம் துவங்கிய பின், விலை குறையும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் குறைவதற்கு பதிலாக அதிகரித்துள்ளது.ஒரு இளநீரின் விலை, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேவை அதிகரித்து, விளைச்சல் குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இளநீரில் பல விதமான புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே பலரும் இளநீர் குடிக்க விரும்புகின்றனர்.விலை உயர்வால், இளநீர் வாங்கவே பலரும் தயங்குகின்றனர். இளநீர் விளைச்சல் குறைய, விவசாயிகளின் அலட்சியமே காரணம் என, வல்லுநர்கள் கூறுகின்றனர்.இதுதொடர்பாக, விஞ்ஞானி மஹேஸ்வரப்பா கூறியதாவது:தென்னை மரங்களை விவசாயிகள் சரியாக பராமரிக்கவில்லை. தென்னை மரங்களுக்கு தென்னை மேம்பாட்டு ஆணையம் சிபாரிசு செய்யும் பொட்டாஷியம் கலந்த உரங்களை பயன்படுத்த வேண்டும். முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.நோய்கள் தாக்கியதால், இளநீர் விளைச்சல் குறைந்துள்ளது. இளநீர், தேங்காய், உலர்ந்த கொப்பரை விலை உயர இதுவே காரணம்.தென்னை மரங்களை விவசாயிகள் நன்றாக பராமரித்தால், நல்ல விளைச்சல் பெறலாம். தென்னங்கன்று நட்டு, மூன்று ஆண்டுகள் பராமரித்தால், அது 100 ஆண்டுகள் பலன் கொடுக்கும்.கர்நாடகாவில் தென்னை விளைவிக்கின்றனர். தென்னை நாரும், இதனால் தயாரிக்கப்படும் உற்பத்திகளை தயாரிப்பது குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது அவர்களுக்கு லாபத்தை அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
30-Jun-2025