சின்னசாமி மைதானத்தின் நற்பெயர் மீட்டெடுக்கப்படும்
பெங்களூரு: ''சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் நற்பெயர் மீட்டெடுக்கப்படும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார். கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் தேர்தலில், தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால், அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளார். பெங்களூரில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை சாந்தா ராமசாமி, வினய் மிருத்யுஞ்சயா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, வெங்கடேஷ் பிரசாத் பேசியதாவது: சின்னசாமி மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடப்பதற்கான, முயற்சிகள் எடுக்கப்படும். கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷனில் பொருளாளர், செயலர் இல்லாததால் சிறு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. சின்னசாமி மைதானம் டிஜிட்டல் மயமாக்கப்படும். முழுதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, கூட்ட நெரிசல்கள் போன்றவை நடக்காத அளவுக்கு சரி செய்யப்படும். இவ்வாறு கூறினார். சாந்தா ராமசாமி பேசுகையில், “ஆடவர்கள் கிரிக்கெட் போட்டி போலவே, மகளிர்களுக்கும் அனைத்து வகையான லீக் போட்டிகளும் நடக்கும். கூடுதலாக, இளம் வீராங்கனைகளின் திறமையை வளர்ப்பதற்கா க, பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும். மஹாராணி டி - 20 லீக் போட்டியின் தரம் மேம்படுத்தப்படும்,” என்றார். இதையடுத்து, தன் அணி சார்பாக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்: சின்னசாமி மைதானத்தின் மீது படிந்துள்ள கறை நீக்கப்பட்டு, மீண்டும் பழையை நற்பெயர் கிடைக்கப் பெறும். மாநிலத்தின் பல கிரிக்கெட் மைதானங்களில் நடக்கும் உட்கட்டமைப்பு பணிகள், விரைவில் முடிக்கப்படும். மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான நிலம் நல்ல முறையில் பயன்படுத்துதல், மைசூரில் உலகத்தரம் வாய்ந்த மைதானம் அமைத்தல். ஆண், பெண் என அனைத்து வயதினருக்குமான லீக் போட்டிகள் நடத்தல். கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீட்கப்பட்டு, முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்படுவர். கிரிக்கெட் கிளப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.