மேலும் செய்திகள்
அதிகம் அறியப்படாத கே. டி.நீர்வீழ்ச்சி
11-Sep-2025
கர்நாடக மாநிலத்தில் உள்ள அழகிய கடலோர மாவட்டங்களில் ஒன்று தான் உத்தர கன்னடா. இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள், ஏராளமான கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரைகளில் கடல் உணவு, நீர் விளையாட்டுகள் என அனைத்தும் பிரபலமானவை. அப்படிப்பட்ட உத்தர கன்னடாவில் பலரும் அறியாத அருவிகளின் பெரிய லிஸ்டே உள்ளது. இந்த லிஸ்டில் ஒன்றான கன்னேகுந்தி அருவியை பற்றி எடுத்துரைக்கிறது, இந்த கட்டுரை. உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கல் நகர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அழகான இடம் தான் கன்னேகுந்தி அருவி. இது முருடேஸ்வரரில் இருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை அடைய சாலை வழியாக செல்லும்போது, சாலையின் இரு புறங்களிலும் மரங்கள், செடிகள் என பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. இதை பார்க்கும்போது, 'பச்சை நிறமே...பச்சை நிறமே' என்ற பாடல் வரிகள் நம்மை அறியாமலே மனதிற்குள் வருகிறது. இயற்கையை ரசித்துக் கொண்டே அருவியை நோக்கிச் செல்லும்போது, பயண களைப்பு எதுவும் தெரியாமல் இருக்கும். பட்கல் மாலத்தீவு அருவிக்கு செல்லும் வழியில், பட்கல் மாலத்தீவு என்ற மல்லாரி ஆற்றின் அழகை ரசிக்கலாம். இந்த மல்லாரி ஆறு, இரண்டு மலைகளுக்கு நடுவே செல்கிறது. தண்ணீரின் நிறம் பார்ப்பதற்கு நீல நிறத்தில் உள்ளதால், பட்கல் மாலத்தீவு என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றின் அழகை ரசித்தவாறே அருவியை நோக்கிச் செல்ல வேண்டியது தான். பலரும் அறியாத, மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத, அமைதியான சூழலில் இருக்கும் அருவியை பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும். மரங்களுக்கு நடுவில் அருவி அழகாக காட்சி அளிக்கிறது. இந்த அருவிக்கு வரும்போது, உள்ளூர் மக்களிடம் வழி கேட்க நேரிட்டால், அவர்களிடம் கன்னேகுந்தி அருவி என கேட்பதற்கு பதிலாக 'காந்தி அருவி' என கேட்பது சிறந்தது. ஏனெனில், உள்ளூர் மக்கள் பலரும் கன்னேகுந்தி அருவி எனும் பெயரை அறியாமல் உள்ளனர். இந்த அருவியை பார்க்கும்போதே, குளிக்க வேண்டும் என்ற ஆசை, நம்மை அறியாமல் மனதிற்குள் வரும். இந்த ஆசையை அடக்க முடியாமல், நாமும் வானத்தில் இருந்து நேரடியாக நிலத்தில் விழும் தண்ணீரில் குளித்து மகிழலாம். அதை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆனந்த குளியல் இந்த நீர், தெளிவாக உள்ளது. நீரின் அடியில் இருக்கும் கல், பாறை உள்ளிட்டவை தெளிவாக தெரிகின்றன. அவற்றை பார்த்துக் கொண்டே இருந்தால், நேரம் போவதே தெரியாது. அந்த அளவிற்கு நீர் தெளிவாக காணப்படுகிறது. இந்த அருவி மிகப்பெரியது அல்ல. அதே சமயம் ஆனந்த குளியல் போடுவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. மரங்கள் நிறைந்த காட்டுக்கு நடுவில் அருவி இருப்பதால், எப்போதும் குளிராகவே இருக்கிறது. இங்கு புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. குறிப்பாக அருவியின் முன்னே நின்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போஸ், தண்ணீரில் காலை விட்டபடி, அதில் மீன் குஞ்சுகள் கடிப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினால், லைக்ஸ்கள் ஏராளமாக குவியும். ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. இங்கு செல்லும்போது, உணவு, தண்ணீர், குடை, ரெயின் கோட், ஷூ அணிந்து செல்ல வேண்டும். எப்படி செல்வது? ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் நேரடியாக பட்கல் ரயில் நிலையத்திற்கு செல்லலாம். அங்கிருந்து டாக்சி மூலம் அருவியை அடையலாம். பஸ்: பெங்களூரில் இருந்து பட்கல் பகுதிக்கு ஏராளமான பஸ்கள் இயங்குகின்றன. அதன் மூலம் அருவியை எளிதில் அடையலாம். சாலை மார்க்கமாக செல்வது சிறப்பு. சொந்த வாகனங்களில் செல்வது அதை விட சிறப்பு. - நமது நிருபர் -
11-Sep-2025