| ADDED : டிச 04, 2025 05:50 AM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவுக்கும், கைக்கடிகாரத்துக்கும் ஏழாம் பொருத்தம் தான். சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரம் 43 லட்சம் ரூபாயாகும். இதேபோன்று, துணை முதல்வர் சிவகுமாரும் அணிந்திருப்பது தான் இம்முறை மாறுதல் ஏற்பட்டு உள்ளது. இதை மாநில பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது. முதல்வர் பதவியை விட்டுத்தருவது தொடர்பாக, சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கட்சி தலைமையின் அறிவுறுத்தலை தொடர்ந்து, இருவரும் பரஸ்பரம் தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து, விருந்தளித்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அப்போது, அவர்கள் சேர்ந்து இருந்தவாறு எடுத்துக் கொண்ட போட்டோக்கள் பேசுபொருளாக மாறியது. காரணம், இருவரும் ஒரே மாதிரி கைக்கடிகாரம் அணிந்திருந்தது தான். சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் பெயர் சாண்டோஸ் டி கார்டியர். இதன் விலை 43 லட்சம் ரூபாய். இதே ரக கைக்கடிகாரத்தை துணை முதல்வர் சிவகுமாரும் அணிந்துள்ளார். இதை தனது, 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துள்ள கர்நாடக மாநில பா.ஜ., 'வறட்சி மற்றும் சீரழிந்த உட்கட்டமைப்புடன் மாநிலம் போராடிக் கொண்டு இருக்கையில் எளிய சோஷலிச முதல்வராக, தன்னை சித்தராமையா காட்டிக் கொள்கிறார்' என தெரிவித்துள்ளது. மேலும், 2016ல் சித்தராமையா அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் போட்டோவையும் வெளியிட்டு, அப்போது அவர் அணிந்திருந்த கடிகாரத்தின் விலை 70 லட்சம் ரூபாய் என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.