உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பொறாமைக்கு மருந்து இல்லை ஊழல் புகாருக்கு சபாநாயகர் பதிலடி

பொறாமைக்கு மருந்து இல்லை ஊழல் புகாருக்கு சபாநாயகர் பதிலடி

மங்களூரு: தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த சபாநாயகர் காதர், ''பொறாமையை குணப்படுத்த மருந்து இல்லை,'' என்று கூறி உள்ளார். கர்நாடக சட்டசபை சபாநாயகர் காதர் அலுவலகத்தில் ஊழல் நடப்பதாகவும், இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உத்தர கன்னடா பா.ஜ., - எம்.பி.,யும், முன்னாள் சபாநாயகருமான விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி நேற்று முன்தினம் கூறி இருந்தார். இதுகுறித்து சபாநாயகர் காதர் மங்களூரில் நேற்று அளித்த பேட்டி: புதிதாக வீடு கட்டும்போது கட்டடம் மீது திருஷ்டி விழக் கூடாது என்பதற்காக, திருஷ்டி பொம்மை வைப்பது வழக்கம். கர்நாடக சட்டசபையில் நான் செய்த மாற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல், முன்னாள் சபாநாயகர் காகேரி குற்றச்சாட்டு கூறுகிறார். அவரது குற்றச்சாட்டை, சட்டசபை மீது விழுந்த திருஷ்டியாக நான் பார்க்கிறேன். எல்லா நோய்களுக்கும் மருந்து உள்ளது. ஆனால் பொறாமையை குணப்படுத்த மருந்து இல்லையே. கர்நாடக எம்.எல்.ஏ.,க்களுக்கு உலகளவில் மதிப்பு உள்ளது. அவர்கள் மதிப்பை மேலும் அதிகரிக்க நான் முயற்சித்து வருகிறேன். என் பணி மீது யாருக்காவது சந்தேகம் இருந்தால், இன்று விதான் சவுதா அலுவலகத்தில் இருப்பேன். அங்கு வந்து என்னை யாராக இருந்தாலும் சந்திக்கட்டும். அவர்களின் குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக கொடுக்கட்டும். நேர்மறையான பதிலளிக்க தயாராக உள்ளேன். அவர்களை போன்று எங்காவது அமர்ந்து நான் பேச மாட்டேன். சபாநாயகர் என்ற பொறுப்பான பதவியில் உள்ளேன். என் மீது எழும் குற்றச்சாட்டு ஒன்றும் புதிது இல்லை. முதல்முறை எம்.எல்.ஏ., ஆனதில் இருந்து, என் மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுபற்றி எனக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ