சித்தராமையாவை காண சென்றதால் வெறிச்சோடிய திம்மாபுரா கிராமம்
கதக் : தினமும் மக்கள் நெரிசல், வாகன போக்குவரத்தால் பரபரப்பாக இருக்கும் கதக் நகரின், திம்மாபுரா கிராமம் நேற்று முன் தினம் வெறிச்சோடி காணப்பட்டது. முதல்வர் சித்தராமையாவை பார்க்க சென்றதால், கிராமம் காலியானது. கதக் நகரின், முள்குந்த சாலையில் உள்ள கனகபவனில், நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் சித்தராமையா வந்திருந்தார். இவரை பார்ப்பதற்காகவே, திம்மாபுரா கிராமத்தினர் டிராக்டர்கள், பஸ்கள், டெம்போக்களில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தனர். கதக்கில் இருந்து, 26 கி.மீ., தொலைவில், திம்மாபுரா கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பலரும் முதல்வர் சித்தாரமையாவின் விசுவாசிகள். இதே காரணத்தால் இந்த கிராமத்தை, 'சித்தராமையா கிராமம்' என, அழைக்கின்றனர். 1990ல் லோக்சபா தேர்தலில், கொப்பால் தொகுதியில் போட்டியிட்ட போது, பிரசாரத்துக்காக திம்மாபுரா கிராமத்துக்கு சித்தராமையா வந்திருந்தார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும், கிராமத்தினரின் பல பிரச்னைகளை தீர்த்து வைத்தார். இதனால் அவர் மீது கிராமத்தினர் அதிகமான அன்பு வைத்துள்ளனர். கடந்த 2023ல் சித்தராமையா முதல்வரான போது, கிராமத்தில் வெற்றி விழா கொண்டாடினர். கோவில்களில் அவரது பெயரில் பூஜை செய்தனர். பிப்ரவ ரியில் திம்மாபுரா கிராமத்தை சேர்ந்த ஒருவர், முதல்வர் சித்தராமையாவின் போட்டோவை பிடித்தபடி, பிரயாக் ராஜில் புனித நீராடி, முதல்வருக்காக பிரார்த்தனை செய்தார். கதக் நகருக்கு முதல்வர் வருவதை அறிந்த கிராமத்தினர், கிடைத்த வாகனங்களில் முதல்வரை காண சென்றதால், திம்மாபுரா கிராமம் வெறிச்சோடியது. மளிகை கடை, டீக்கடை உட்பட எந்த கடையும் திறக்கவில்லை.