மகளின் திருமணத்துக்காக கோவிலில் திருடிய பெண் உட்பட மூவர் கைது
சிக்கபல்லாபூர் : மகளின் திருமண செலவுக்காக, கோவிலில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகாவின், ஹிரியலசேனஹள்ளி கிராமத்தில், சவுடேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஜூலை 23ம் தேதியன்று, சவுடேஸ்வரி தேவிக்கு அணிவிக்கும் வெள்ளி முக கவசம், மூக்குத்தி, தாலியில் உள்ள தங்க பொட்டுகள், கால் கொலுசு உட்பட, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயின. இது தொடர்பாக, திப்பூரஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், கோவில் அர்ச்சகர் சிக்கமல்லேஷப்பாவை விசாரித்த போது, ஒரு பெண்ணுடன் சேர்ந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியின், விஜயபுராவை சேர்ந்த லதா, 50, என்ற பெண்ணுக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறார். ஆனால் திருமணத்துக்கு பணம் இல்லாததால், கோவில்களில் திருட ஆரம்பித்தார். இவருக்கு மூன்றாவது மகளின் காதலர் நவீன்குமார், 30, என்பவரும் உதவியாக இருந்துள்ளார். இவர்கள் சவுடேஸ்வரி கோவில் அர்ச்சகர் சிக்கமல்லேஷப்பாவுக்கு, பணத்தாசை காண்பித்து, வலை விரித்தனர். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவரது உதவியுடன் நகைகளை திருடியது, விசாரணையில் தெரிந்தது. அர்ச்சகர் சிக்கமல்லேஷப்பா, லதா, அவரது மகளின் காதலர் நவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.