உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உடுப்பி காங்., பிரமுகர் கொலை வழக்கு கூலிப்படையாக செயல்பட்ட மூவர் கைது

 உடுப்பி காங்., பிரமுகர் கொலை வழக்கு கூலிப்படையாக செயல்பட்ட மூவர் கைது

உடுப்பி: காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோசா கொலை வழக்கில், கூலிப்படையாக செயல்பட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து, உடுப்பி எஸ்.பி., ஹரிராம் சங்கர், நேற்று அளித்த பேட்டி: உடுப்பி நகரில் பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான டேவிட் டிசோசா, கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால், சுட்டு கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கண்டுபிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகள் சம்பவத்துக்கு பின், ஏர்மால் அருகில் பைக்கை விட்டு சென்றனர். அந்த பைக் யாருடையது என, விசாரணை நடக்கிறது. கொலையாளிகளை கண்டுபிடிக்கும் நோக்கில், வாகன சோதனை நடத்தப்பட்டது. இன்று (நேற்று) காலை, பைந்துாரின், ஒத்திநேனி அருகில் பஸ்சை தடுத்து நிறுத்தி, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில் இருந்த மூவர், கீழே இறங்கினர். அவர்கள் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்ததால், காபு எஸ்.ஐ., தேஜஸ்வி பிடிக்க முயற்சித்தார். அந்நபர்கள் அவரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர். அப்போது தற்காப்புக்காக, எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டதில், காலில் குண்டு பாய்ந்து ஒருவர் கீழே விழுந்தார். அதன்பின் மூவரையும் போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ.,யும், குற்றவாளியும் சிகிச்சையில் உள்ளனர். வழக்கில் கைதான முதல் குற்றவாளியான ராஜு மீது, மஹாராஷ்டிரா, டில்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உட்பட, ஐந்து மாநிலங்களில், கொலை, பெண்களை தாக்கியது என, 26 வழக்குகள் உள்ளன. இவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து, டேவிட் டிசோசாவை கொலை செய்ய, வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஏவியுள்ளது விசாரணையில் தெரிந்தது; அவரும் ஒப்பந்ததாரர்தான். இருவருக்கும் இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் பண விவகாரத்தில், மனஸ்தாபம் ஏற்பட்டதே, கொலைக்கு காரணம். அந்த ஒப்பந்ததாரரை கண்டுபிடிக்க, தனிப்படை அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளி அனமோல், மூன்றாவது குற்றவாளி ஜியாவுல் மஜுல் ஷேக் மீதும், துப்பாக்கி சூடு, கொள்ளை என, பல வழக்குகள் உள்ளன. டேவிட் டிசோசாவை சுட்ட ராஜுவிடம் இருந்து 9 எம்.எம். ரக துப்பாக்கி, மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மூவரும் இரண்டு மாதங்களாகவே, உடுப்பிக்கு வந்து, டேவிட் டிசோசாவை கொலை செய்ய ஒத்திகை பார்த்ததை ஒப்புக் கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை