உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காவிரி நதியில் திரில்லிங் படகு சவாரி

 காவிரி நதியில் திரில்லிங் படகு சவாரி

- நமது நிருபர் -: மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் சிவனசமுத்ரா அருவி உள்ளது. இந்த அருவி பார்ப்பதற்கே பிரமிப்பை ஏற்படுத்தும். இதற்கு இங்கிருந்து கொட்டும் தண்ணீரின் அளவே காரணம். இந்த கண்கொள்ளா காட்சியை ரசிக்க இரு கண்கள் போதாது. இங்கு செல்வதற்கு ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த அருவியின் முழு அழகை பார்க்க, ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரம், பெரிய படிக்கட்டுகள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கும். சூடான உணவு அதுமட்டுமின்றி, இந்த பகுதியில் ஏராளமான உணவு கடைகள் உள்ளன. சூடான மிளகாய், வாழைக்காய் பஜ்ஜிகள், சோளம், மசாலா பொரி, வெள்ளரிக்காய், மாங்காய், அன்னாசி பழம், வாழைப்பழம், ஐஸ் கிரீம் போன்றவை விற்கப்படுகின்றன. இதை சாப்பிட்டு கொண்டே, அருவியின் அழகை ரசிக்கலாம். மனதிற்கு பிடித்தவருடன் பேசி கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் போதாது என நினைக்கக்கூடிய அருவியின் அழகை ரசித்து முடித்த பின் ஓரிரு புகைப்படங்களை எடுத்துவிட்டு, அங்கிருந்து புறப்படலாம்.இந்த அருவிக்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. கர்நாடகாவில் முதன் முதலில் நீர் மின்சாரம் இங்கு தான் தயாரிக்கப்பட்டது. இங்கிருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரம், தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தங்கவயலுக்கே சென்றது. இதெல்லாம் வரலாற்று நிகழ்வுகள். ஷூட்டிங் ஸ்பாட் இந்த அருவியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் தலக்காடு எனும் பகுதி உள்ளது. இங்கு காவிரி நதி பாய்ந்து ஓடுகிறது. இங்கு தான் பரிசல் படகு சவாரி உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் வழியில் சிவனசமுத்ரா பாலம் வரும். இந்த பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பாய்ந்து ஓடும் காவிரி நதியை பார்ப்பது சிறந்த விஷயமாகும். இந்த பாலத்தில் 80, 90களில் தமிழ், ஹிந்தி, கன்னட படங்களின் ஷூட்டிங் நடந்துள்ளது. பாலத்தை பார்த்துவிட்டு, தலக்காடுக்கு போனால், அங்கு பரிசல் படகில் சவாரி செய்யலாம். இதற்கு ஒரு நபருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பரிசலில் பயணிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும். இதில், பயணிக்கும் போது எப்போதும் பேலன்ஸ் இல்லாமல் இருக்கும். இதனால், நாம் நீரில் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவோமோ என்ற பயம் மனதில் ஏற்படும். இந்த 'திரில்லிங்' அனுபவம் தான் பரிசல் சவாரியின் சிறப்பே. இதில், பயணிப்பவர்களுக்கு, 'லைப் ஜாக்கெட்டுகள்' கொடுக்கப்படும். இதை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும். இந்த பயணத்தை முடித்தவுடன் கரையோரங்களில் உள்ள மீன் கடைகளில், சுவையான மீன் வறுவலை ரசித்து, ருசிக்கலாம். நாம் விரும்பும் மீன்கள் சூடாக வறுத்து தரப்படும். இப்படிப்பட்ட ஓர் இடத்திற்கு அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டும். இந்த இடத்திற்கு பஸ், ரயிலில் செல்வது சரியான தேர்வு கிடையாது. அனைவரும் தங்கள் சொந்த வாகனங்களில் செல்ல வேண்டும். அப்போது தான் நிறைய இடங்களை பார்த்து கொண்டே செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ