மேலும் செய்திகள்
சினிமா
30-Jul-2025
பெங்களூரு: கர்நாடக அரசு, 200 ரூபாய்க்கும் மேல் சினிமா டிக்கெட் விற்கக்கூடாது என அறிவித்திருந்தும், நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தின் டிக்கெட் 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரஜினி, அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கூலி படம், வரும் 14ம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது. கர்நாடகாவில், ஜெயண்ணா பிலிம்ஸ் வழியாக ஏ.வி., மீடியா கன்சல்டன்சி விநியோகித்து உள்ளனர். இந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் துவங்கியது. பெங்களூரில் முதல் 30 நிமிடங்களிலேயே 66 காட்சிகளுக்கான 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இது பெங்களூரு பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. கே.ஜி.எப்., 2, லியோ படங்களின் சாதனையை முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, டிக்கெட் கட்டணம் பற்றி ரசிகர்கள் பெருமையாக கூறி கொள்கின்றனர். இம் மாதம் 14ம் தேதி சிறப்பு காட்சிகள் தமிழ், தெலுங்கு மொழியில் காலை 6:00 மணிக்கு திரையிடப்படுகிறது. இந்த காட்சிக்கான டிக்கெட்டுகள் பெங்களூரில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள், வணிக வளாகங்களில் 500 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டுள்ளது. சில தியேட்டர்களில் 1,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக எம்.ஜி., சாலையில் உள்ள ஸ்வாகத் சங்கர்நாக் சித்ரமந்திரா எனும் தியேட்டரில் டிக்கெட் 2,000 ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளது. இந்த தியேட்டரில் 618 இருக்கைகள் உள்ளன. முதல் நாளில் மூன்று காட்சிகளும் 'ஹவுஸ் புல்' ஆகி உள்ளது. சிறப்பு காட்சி மூலம் மட்டுமே, 7.35 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது. தாவரகெரேவில் உள்ள லட்சுமி தியேட்டர், தொட்டமாவள்ளியில் உள்ள ஊர்வசி தியேட்டரில் 800 - 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. டிக்கெட் கட்டணம், ஆன்லைனிலேயே 500, 1,000 ரூபாய்க்கு 'புக்கிங்' செய்யப்படுகிறது. கர்நாடகாவில் டிக்கெட்டுகள் 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு திரையரங்குகள் உட்பட, வணிக வளாகங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் கர்நாடகாவில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலானது. கன்னட மொழி பெயர்ப்பில் மட்டும் 5.70 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. கூலி படம் எவ்வளவு வசூல் ஈட்டும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
30-Jul-2025