புகையிலை விலை திடீர் சரிவு; விவசாயிகள் போராட்டம்
மைசூரு: புகையிலை விலை திடீரென குறைந்ததால், அதிக விலைக்கு புகையிலையை வாங்க கோரி கலெக்டரிடம், விவசாயி பிரதிநிதிகள் மனு வழங்கினர். மைசூரு மாவட்டம் ஹூன்சூர், பெரியபட்டணா, கே.ஆர்., நகர், அரக்கலகூடு ஆகிய பகுதிகளில் புகையிலை பயிடப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய ஆதாராமாக உள்ளது. ஆண்டு முழுதும் மிகுந்த சிரமப்பட்டு பயிரிடுகின்றனர். கடந்த வாரம் 320 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ புகையிலை, இரண்டு நாட்களில் 50 ரூபாயாக குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். இதையடுத்து, நேற்று மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய விவசாயிகள், 'புகையிலையை அதிக விலைக்கு வாங்க வேண்டும்' என்று கோரிக்கை மனு வழங்கினர். விவசாயிகள் கூறுகையில், 'புகையிலை விலை சரிவுக்கு நிறுவனங்களே காரணம். கர்நாடகாவில் ஆண்டு தோறும் 100 மில்லியன் கிலோ புகையிலை பயிரிடுகிறோம். ஆந்திராவில் ஒரு கிலோ புகையிலை 420 ரூபாய்க்கு விற்கின்றனர். கர்நாடகா புகையிலைக்கு விலை குறைந்து உள்ளது' என்றனர். ... புல் அவுட் ... புகையிலைக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. புகையிலை விலை பிரச்னையை மத்திய அரசு தீர்க்கும். இப்பிரச்னையில் மாநில அரசு பற்றி நான் எதுவும் கூறவில்லை. - யதுவீர் உடையார், பா.ஜ., - எம்.பி., மைசூரு