மேலும் செய்திகள்
குடும்பத்துடன் குதுாகலிக்க கொடிகே நீர்வீழ்ச்சி
17-Jul-2025
இயற்கை எழில் கொட்டி கிடக்கும், முல்லய்யனகிரி மலையில் ஊதா குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதை காண சுற்றுலா பயணியர் பெருமளவில் குவிகின்றனர். குறிஞ்சிப்பூக்கள் மலையின் அழகை, மேலும் அதிகரித்துள்ளது. சிக்கமகளூரு நகரில் உள்ள முல்லய்யனகிரி மலை, பூலோக சொர்க்கமாகும். சிக்கமகளூரில் பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், முல்லய்யனகிரி மலை சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. இது கர்நாடகாவின், மிக உயரமான சிகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில், நான்காவது மிகப்பெரிய மலையாகும். கடல் மட்டத்தில் இருந்து, 6,330 அடி உயரத்தில் உள்ளது. டிரெக்கிங் பிரியர்கள், சுற்றுலா பயணியருக்கு விருப்பமான தலமாகும். இயற்கை ஆர்வலர்களின் பேவரிட் மலைப்பகுதியாகும். இதனை முல்லப்ப சுவாமி மலை என்ற பெயரிலும் அழைக்கின்றனர். மலை உச்சியில் முல்லப்ப சுவாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்லும் பாதை முழுதும், கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமையான காட்சிகள் தென்படுகின்றன. மலை உச்சியில் இருந்து சூரியோதயம், சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பது, கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இதை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணியர் குவிகின்றனர். மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய இடங்களில், முல்லய்யனகிரி மலையும் ஒன்றாகும். இம்முறை மழைக்காலத்தில் இங்கு வருவோருக்கு, ஆச்சரியம் காத்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வமான நீல குறிஞ்சி மலர்கள், தற்போது பூத்து குலுங்குகின்றன. மலையே நீல நிற பட்டுச்சேலையை விரித்து போட்டதை போன்று, அழகாக தோன்றுகிறது. குறிஞ்சிப்பூக்கள் மலையின் அழகை அதிகரித்துள்ளது. 'வெட்டிங் போட்டோ ஷூட்' நடத்த தகுதியான இடமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணியர், குறிஞ்சி மலர்களுக்கு நடுவில் நின்று, போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். மலையேற்றத்துக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் வருகின்றனர். முல்லய்யனகிரி மலையில் ஏறி செல்லும் போது, இமயமலை அடிவாரத்தில் இருக்கிறோமோ என்ற உணர்வு ஏற்படும். ஒரு முறை முல்லய்யனகிரியில் கால் வைத்தால், இங்கிருந்து திரும்பி செல்லவே மனம் வராது. ஒரு ஓரத்தில் மலை, இன்னொரு ஓரத்தில் ஆழமான பள்ளத்தாக்கு, இவைகளுக்கு இடையே அபாயமான திருப்பங்கள் குறுகலான சாலையில் பயணிக்கும் போது, திரில்லிங்காக இருக்கும். மலையில் இயற்கையாக உருவான இரண்டு குகைகள் உள்ளன. இந்த குகைகள் வழியாக சென்றால், முல்லப்ப சுவாமி கோவிலை சென்றடையலாம் என, கூறுகின்றனர். மலை உச்சியில் நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை ஆறு, பசுமையான காபி தோட்டங்கள், நீர் வீழ்ச்சி, அபூர்வமான தாவரங்களை காணலாம். மழைக்காலம் மட்டுமின்றி, அனைத்து பருவ காலங்களிலும் பார்க்கலாம். பனிக்காலத்தில் மலை மீது படர்ந்துள்ள பனித்துளிகளை காண்பது, அற்புதமான காட்சியாக இருக்கும். இப்போது சென்றால் நீல குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கியுள்ள அழகான காட்சியை கண்டு ரசிக்கலாம். எப்படி செல்வது? பெங்களூரில் இருந்து, 265 கி.மீ., மைசூரில் இருந்து 171 கி.மீ., மாண்டியாவில் இருந்து 180 கி.மீ., தொலைவில் சிக்கமகளூரு உள்ளது. சிக்கமகளூருவில் இருந்து, 22 கி.மீ., தொலைவில் முல்லய்யனகிரி உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. சிக்கமகளூரில் வந்திறங்கி, இங்கிருந்து முள்ளய்யனகிரிக்கு செல்லலாம். அனுமதி நேரம்: காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை. அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: சந்திரதுரோண மலை, ஜரி நீர்வீழ்ச்சி, பட்டர் மில்க் நீர் வீழ்ச்சி, பாபாபுடன் கிரி மலை. - நமது நிருபர் -
17-Jul-2025