பாரம்பரிய நடைமுறையை பின்பற்ற கட்டாயப்படுத்த கூடாது: ஐகோர்ட்
பெங்களூரு: 'ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், பாரம்பரியமாக பின்பற்றி வரும் நடைமுறையை வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை உள்ளது.அதை தொடருமாறு கட்டாயப்படுத்துவதை அனுமதிக்க முடியாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.யாத்கிர் மாவட்டம், வதேகெராவின் துமகூரு கிராமத்தை சேர்ந்தவர்கள், மொஹரம் பண்டிகையின்போது, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து, 'காசிமள்ளி' தேவியை வணங்குவர். அப்போது, மாடிகா சமுதாயத்தினர், 'ஆலாய் போசாய்' என்ற பெயரில் கோவில் முன் நடனமாடுவர். ஆனால், சமீப ஆண்டுகளாக, இந்த நடனம் ஆட, அச்சமுதாய மக்களுக்கு விருப்பம் இல்லை.இதையடுத்து, கிராம மக்கள் சிலர், நடனம் ஆட வேண்டும் என்று கூறி உருட்டுக் கட்டையால் மாடிகா சமுதாயத்தினரை தாக்கியுள்ளனர்.இதை கண்டித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாடிகா சமுதாயத்தினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.இம்மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக கொண்டாடும் ஒரு முஸ்லிம் பண்டிகை, ஹிந்துக்களில் இரு சமூகத்தினர் இடையே மோதலுக்கு காரணமாக மாறியிருப்பது வருத்தம் அளிக்கிறது.சமீப காலமாக வன்முறை அல்லது மத மோதல்கள் இல்லாமலும் சட்டம் - ஒழுங்கு பாதிக்காமலும் பண்டிகைகளை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும், சமூகங்கள் இடையே நல்லிணக்கம் பரப்பும் பண்டிகைகளை கொண்டாடுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.யாத்கிர் மாவட்ட ஹிந்து, முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சமூக விழாக்களில் பங்கேற்று, நல்லிணக்கத்தை பேணி வருகின்றனர்.சரண பசவேஸ்வரா கோவில் மற்றும் காஜா பந்தனன்வாஸ் தர்கா போன்றவை மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகும். இதை நாடு முழுதும் பின்பற்ற வேண்டும்.எனவே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பாரம்பரியமாக பின்பற்றி வரும் நடைமுறையை நிராகரிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை தொடருமாறு கட்டாயப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள், அனைவரையும் விசாரித்து, சட்டப்படி தகுந்த முடிவுகள் எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.