மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
22-Nov-2025
ஷிவமொக்கா: காதலர்கள் வீட்டை விட்டு ஓடுவதற்கு ஒத்துழைப்பு அளித்தனர் என்பதால், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், இரட்டை கொலையில் முடிந்தது. ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவின் ஜெய்பீம் லே - அவுட்டில் வசித்தவர்கள் கிரண், 25, மஞ்சுநாத், 45. இவர்கள் இருவரும் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றினர். கிரணின் நண்பர் நந்தீஷ், 25. இவரும் இதே பகுதியில் வசிக்கும் சிருஷ்டி, 22, என்பவரும் பரஸ்பரம் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று நாட்களுக்கு முன், ஊரை விட்டு ஓடினர். நேற்று முன்தினம் பத்ராவதிக்கு திரும்பினர். வீட்டுக்கு செல்லாமல் ஓல்டு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று, பாதுகாப்பு கேட்டு அடைக்கலம் கோரினர். காதலியுடன் நந்தீஷ் ஊரை விட்டு ஓடுவதற்கு, அவரது நண்பர் கிரண் உதவியதாக தெரிகிறது. இதையறிந்து கோபமடைந்த சிருஷ்டியின் அண்ணன், தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு, கிரணின் வீட்டுக்கு வந்து, தகராறு செய்துள்ளார். இவ்வேளையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. சிருஷ்டியின் அண்ணனும், அவரது நண்பர்களும் கிரணை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுநாத், 45, சண்டையை கவனித்து சமாதானம் செய்ய முயற்சித்தார். அவரையும் சிருஷ்டியின் அண்ணன் கத்தியால் குத்தினார். காயமடைந்த மஞ்சுநாத், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பத்ராவதி போலீசார், கொலை தொடர்பாக, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து, எஸ்.பி., மிதுன்குமார், நேற்று அளித்த பேட்டி: காதலித்து வீட்டை விட்டு ஓடிய இளைஞரும், இளம் பெண்ணும் எஸ்.சி., சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வீட்டை விட்டு ஓடியதால், இரண்டு தரப்பினருக்கும் சண்டை நடந்தது. இருவர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். கொலை தொடர்பாக ஐவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
22-Nov-2025