ஜாதிவாரி சர்வே தேவையற்றது மத்திய அமைச்சர் கண்டனம்
பெங்களூரு : ''ஜாரிவாரி சர்வேயை இத்தோடு நிறுத்துங்கள். இது பைத்தியக்காரத்தனம்,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதல்வர் சித்தராமையா, தேவையற்ற வேலையை செய்கிறார். என் வீட்டில் சர்வே ஊழியர்கள், ஒரு மணி நேரத்துக்கு மேலாக கேள்விகள் எழுப்பி, பதில் பெற்றனர். இது விவேகமற்ற ஆய்வாகும். தொழில்நுட்ப பிரச்னை உள்ளது. சர்வேயில் தேவையற்ற கேள்விகளை கேட்டு, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். மக்கள் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டார்கள். ஜாதிவாரி சர்வே நடத்தி, அரசு என்ன சாதிக்கிறது. சர்வே கேள்விகளை எளிமையாக்க வேண்டும். பல அதிகாரிகள், தேவையற்ற கேள்விகளை கேட்கின்றனர். மக்கள் குழப்பத்துக்கு ஆளாகின்றனர். முழுமையாக சர்வே நடத்த, ஆறு மாதங்கள் வேண்டும். தற்போது நடக்கும் சர்வே, காந்தராஜு நடத்திய சர்வேயை விட, மிகவும் மோசமாக உள்ளது. இந்த அரசுக்கு, ஜாதியை தவிர வேறு எதுவும் தேவையில்லை. எந்த சமுதாயத்துக்கு, அநியாயம் செய்ய வேண்டும் என்பது பற்றியே, முதல்வர் சிந்திக்கிறார். சித்தராமையாவை பற்றி காங்கிரசாரே விமர்சிக்கின்றனர். இது அவருக்கு மதிப்பை தராது. இதேபோன்று சர்வே நடத்தினால், முடிவதற்கு ஒரு ஆண்டு ஆகும். உடனடியாக சர்வேயை ரத்து செய்ய வேண்டும். தேவராஜ் அர்ஸ் போட்டோவை போட்டு, சர்வே நடத்துவீர்களா. மேல் ஜாதியினரை மிதிக்கும் வேலையை செய்யாதீர்கள். அரசு சார்பில் ஜாதி வாரி சர்வே நடத்துவது, வாந்தி எடுப்பதை போன்றுள்ளது. இதை நிறுத்துவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.