வருத்தப்படாத தலைவர் ஜி.டி.தேவகவுடா
மைசூரு: ''குமாரசாமி குணமடைந்து, முதல்வராகும் கனவில், ம.ஜ.த.,வை உருவாக்க தயாராக உள்ளார். ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து என்னை நீக்கியதில் வருத்தம் இல்லை,'' என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார். மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, கட்சி மூத்த தலைவராவார். பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்ததில் இருந்து அதிருப்தியில் இருந்த அவர், கட்சி கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். ஆனால் அதே வேளையில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் என ஆளுங்கட்சியினருடன் நெருக்கமாக காணப்பட்டார். இது அவர் சார்ந்த கட்சி தலைமைக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ம.ஜ.த.,வின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி, நேற்று முன்தினம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு மாற்றி அமைக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த ஜி.டி.தேவகவுடா நீக்கப்பட்டார். இதுதொடர்பாக, மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: நான், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படாதபோது, எனக்கு வருத்தம் இருந்தது. எனவே, கட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை. ஆனால், ஒருங்கிணைப்புக் குழு தலைவரான பின், மாநிலம் முழுதும் பயணம் செய்து, பல கூட்டங்களை நடத்தினேன். இப்பதவியில் இருந்து என்னை நீக்கியதில் எந்த வருத்தமும் இல்லை. சித்தராமையாவும், நானும் 25 ஆண்டுகள் ம.ஜ.த.,வை பலமான கட்சியாக உருவாக்கினோம். சித்தராமையா, காங்கிரசில் சேர்ந்த பின், தேவகவுடாவுடன் சேர்ந்து, கட்சியை பலப்படுத்தினேன். குமாரசாமி தற்போது சக்தி வாய்ந்த மத்திய அமைச்சராக உள்ளார். குமாரசாமி குணமடைந்து, முதல்வராகும் கனவில், ம.ஜ.த.,வை உருவாக்க தயாராக உள்ளார். யாரும் இல்லாவிட்டாலும், கட்சியை கட்டி எழுப்புவேன் என்ற நம்பிக்கை பெற்றுள்ளார். நான் இன்னும் ம.ஜ.த.,வில் தான் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.