உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் ராஜினாமா மேல்சபை தலைவர் ஹொரட்டி சவால்

 குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் ராஜினாமா மேல்சபை தலைவர் ஹொரட்டி சவால்

பெலகாவி: ''மேல்சபையில் ஊழியர்கள் ஆள்சேர்ப்பில் நான் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள, குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்,'' என்று, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிவித்தார். கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நேற்று துவங்கியது. இந்நிலையில் மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மீது காங்கிரஸ் உறுப்பினர் நாகராஜ் யாதவ் குற்றச்சாட்டு மழை பொழிந்து உள்ளார். மேல்சபையில் ஊழியர்கள் ஆள்சேர்ப்பில் பசவராஜ் ஹொரட்டி முறைகேடு செய்ததாகவும், ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறினார். இதுதொடர்பாக சட்டசபை செயலர் விசாலாட்சிக்கும் கடிதம் எழுதினார். இதுகுறித்து பசவராஜ் ஹொரட்டி கூறியதாவது: என் பதவியில் நான் நேர்மையாக பணியாற்றுகிறேன். என் மீது குற்றச்சாட்டு கூறிய நபர் ஆதாரம் அளிக்கவில்லை. ஆதாரம் கொடுக்கவில்லை என்றால் அந்த நபர் கோழை. நான் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக மற்ற உறுப்பினர்கள் யாரும் கூறவில்லை. வெறும் குற்றச்சாட்டுகள் கூறாதீர்கள். அதை நிரூபியுங்கள். நிரூபித்தால் ஒரு நிமிடம் கூட எனது பதவியில் இருக்க மாட்டேன்; ராஜினாமா செய்வேன். எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது சபையின் பொறுப்பு. ஆதரவு உள்ளதா, இல்லையா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும். சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன். முதல்முறை எம்.எல்.சி.,யான நாகராஜ் யாதவை, உரிமைகள் மற்றும் பொறுப்பு குழு தலைவராக நியமித்தது எனது தவறு. இந்த கூட்டத்தொடரில் வடமாவட்ட பிரச்னை குறித்து பேச அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ