சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வீடியோ வெளியாகி மீண்டும் பகீர்
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் ரவுடி குப்பாச்சி சீனாவின் கூட்டாளிகள், சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், தண்டனை கைதிகள் உட்பட 4,000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான, நடிகர் தர்ஷனும் இங்கு தான் உள்ளார். இந்நிலையில், கொலை வழக்கில் சிறையில் உள்ள, பிரபல ரவுடி சீனிவாஸ் என்கிற குப்பாச்சி சீனா, சிறைக்குள் தன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடும் வீடியோ, கடந்த வாரம் வெளியானது. இதுகுறித்து சிறை துறை கூடுதல் டி.ஜி.பி., தயானந்தா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறை துறை ஐ.ஜி., திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார். அதிகாரிகள், ஊழியர்கள் அலட்சியத்தால், சிறைக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது தெரிந்தது. இந்த கொண்டாட்டம் தொடர்பாக சிறையின் இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிறையில் இருக்கும் குப்பாச்சி சீனாவின் கூட்டாளிகள் சொகுசு வாழ்க்கை வாழும், வீடியோ நேற்று வெளியானது. அதாவது கைதிகள் அறையில் எல்.இ.டி., டி.வி., கேஸ் அடுப்பு, இறைச்சி இருப்பது, அந்த வீடியோவில் உள்ளது. மேலும் இயேசு கிறிஸ்து உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, சில கைதிகள் நிற்கும் படமும் வெளியாகி உள்ளது. இரண்டு கைதிகள் மொபைல் போனில் 'செல்பி' எடுத்த படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது பரப்பன அக்ரஹாரா சிறையா அல்லது சொகுசு விடுதியா என்று கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசாக இருப்பது தொடர்பான வீடியோ வெளியானபோது, உச்ச நீதிமன்றம் கடும் கோபம் அடைந்தது. கைதிகளுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தி கொடுக்கும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டிருந்தது. ஆனால் எதற்கும் கவலைப்படாமல், கைதிகளுக்கு, சிறை அதிகாரிகள், ஊழியர்கள் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.