முதல்வர் சிவகுமாரின் கனவு பலிக்காது என்கிறார் விஜயேந்திரா
பாகல்கோட்: மீண்டும் முதல்வராகி விடலாம் என பகல் கனவு காண்பதாக, சிவகுமாரை, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கிண்டல் செய்துள்ளார். பாகல்கோட் மாவட்ட பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின், 25 ஆண்டு கால பொது சேவையை கொண்டாடும் வகையில் நேற்று பைக் பேரணி நடந்தது. பேரணியை துவக்கி வைத்த பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பைக் ஓட்டி சென்றார். பின், அவர் அளித்த பேட்டி: மு தல்வர் சிவகுமாருக்கு ரியல் எஸ்டேட் தொழில் மீது மட்டுமே ஆர்வம் உள்ளது. விவசாயிகள் பற்றி துளியும் அவருக்கு கவலை இல்லை. குப்பையில் இருந்து சாறு எடுக்க சிவகுமாரால் முடியும். ஆனால் விவசாயிகள் கஷ்டத்தை துடைக்க முடியாது. நாங்கள், ‘பல்லாரி சலோ’ பாதயாத்திரை நடத்திய போதே, விவசாயிகளுக்கு, அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். விவசாயிகளுக்கு வெறும் 2,000 ரூபாய் ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளனர். அதையும் வழங்கவில்லை. மாநிலத்தின் சாலைகளை மேம்படுத்தவில்லை. அனைத்து எம்.எல்.ஏ., தொகுதியிலும் பிரச்னை உள்ளன. அதை சரிசெய்ய அரசிடம் பணம் இல்லை. ரகசிய கண்காணிப்பு நடத்தும் பெருமை சிவகுமாரையே சாரும். ரமேஷ் ஜார்கிஹோளியை ஆபாச வழக்கில் சிக்க வைத்தது யார் என்று இந்த மாநிலத்திற்கே தெரியும். மீண்டும் முதல்வராகி விடலாம் என்று சிவகுமார் பகல் கனவு காண்கிறார். அவர் கனவு காண்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இன்னும் இருக்கும் பதவி காலத்தில் மாநில நலனுக்காக அவர் பணியாற்றட்டும். இவ்வாறு அவர் கூறினார்.