உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சட்டசபையை நடத்த விடமாட்டோம் அரசுக்கு விஜயேந்திரா எச்சரிக்கை

சட்டசபையை நடத்த விடமாட்டோம் அரசுக்கு விஜயேந்திரா எச்சரிக்கை

பெங்களூரு: ‘‘வறட்சி நிவாரண நிதியை விவசாயிகளுக்கு விரைந்து வழங்காவிட்டால், பெலகாவியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த விடமாட்டோம்,’’ என, ஆளும் காங்கிரஸ் அரசை பா.ஜ., தலைவர் விஜயேந்திரா எச்சரித்துள்ளார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்தில், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டி: கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விரக்தி அடைந்து உள்ளனர். அவர்கள், தற்கொலை செய்து கொள்வதாக கூறுகின்றனர். இதை கேட்பதற்கே அச்சமாக இருக்கிறது. மனவலிமையை இழந்து காணப்படும் அவர்களுக்கு மாநில அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

50 லட்சம் விவசாயிகள்

பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், 50 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரண தொகை முழுமையாக வழங்கப்பட வேண்டும். நிவாரண நிதியை விரைந்து வழங்காவிட்டால், பெலகாவியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த விடமாட்டோம். காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர், 2,500 ரூபாய் நிவாரணம் என்கின்றனர், சிலர், 5,000 ரூபாய் நிவாரணம் என்கின்றனர். இந்த விஷயத்தை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி: முதல்வர் சிவகுமார் பேசுவது அனைத்தும் பொய். மக்களுக்கு சேவை செய்யும் ஆஷா ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க காங்கிரஸ் அரசிடம் பணம் இல்லை.

ரூ.10 லட்சம் எங்கே?

சிவகுமார் முதல்வரானதிலிருந்து மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. கர்நாடக பாரத் ஜோடோ இளைஞர்கள் சங்கம் என்ற பெயரில் பெங்களூரில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த சங்கத்தில் பா.ஜ., – ம.ஜ.த., தொண்டர்கள் இருக்க முடியாது. எனவே, பாரத் ஜோடோ சங்கம் என்ற பெயரில் பணம் தவறான வகையில் செலவிடப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சிக்கான தேர்தல் எப்போது நடந்தாலும் அதற்கு தயாராகவே இருக்கிறோம். பெங்களூரின் ஐந்து மாநகராட்சிகளிலும் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணியே வெல்லும். ஹிரியூர் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியிட்டால் ம.ஜ.த.,வினர் வேலை செய்வர். ம.ஜ.த., வேட்பாளர் போட்டியிட்டால் பா.ஜ.,வினர் வேலை செய்வர். எங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை