விநாயகர் சிலை திருட்டு கிராமத்தினர் வருத்தம்
தாவணகெரே: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக, சாலையோரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலையை, மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளனர். தாவணகெரே மாவட்டம், ஜகளூர் தாலுகாவின், யரகட்டி கிராமத்தில் நேற்று முன் தினம் ஒன்று கூடி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர். சாலையோரம் பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தனர். நேற்று முன் இரவு வரை, ஆடிப்பாடி கொண்டாடினர். அதன்பின் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். நேற்று காலை பூஜை செய்வதற்காக, கிராமத்தினர் வந்து பார்த்தபோது, சிலை மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், ஜகளூரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் கிராமத்துக்கு வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சிலை திருடர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். கிராமத்தின் சாலைகளில் ஊர்வலம் நடத்தி, விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். சிலை திருடு போனதால், மன வருத்தம் அடைந்துள்ளனர்.