வீரேந்திர பப்பியின் சொத்துகள் ரூ.55 கோடி, 5 கார் முடக்கம்
பெங்களூரு: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதாகி உள்ள, சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து விலை உயர்ந்த கார்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அண்டை மாநிலமான கோவாவில் சூதாட்ட விடுதிகளில் நடத்தி, அதில் கிடைத்த பணத்தை, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில், சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக நடத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் கிடைத்த பணத்தில், ஐந்து விலை உயர்ந்த கார்களை வீரேந்திர பப்பி வாங்கியது தெரிந்தது. இதுதவிர 9 வங்கிக் கணக்குகளில் 55 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதும் தெரியவந்தது. பணம், கார்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. ஏற்கனவே, 12 கோடி ரொக்கம் உட்பட மொத்தம், 18 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகளை அமலாக்கத்துறை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.